June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

“அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும்” -மு.க.ஸ்டாலின் உரை

1 min read

“All states should be autonomous” – M.K. Stalin’s speech

18.2.2026
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை முன்வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா, தன்னுடைய இறுதி உயில் போல எழுதியதுதான் மாநில சுயாட்சிக் கொள்கை. அவருடைய மறைவுக்குப் பிறகு தமிழினத் தலைவர் கலைஞர், “மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி” என்பதை ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக வடித்துத் தந்தார். அதனை முழுமுதல் கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியானது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல.

ஒரு மாநிலமாக, நம் மக்கள் காணும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும் அளவிற்கு நம்மிடம் அதிகாரங்கள் இல்லை. ஏனென்றால், மாநில உரிமைகளை வழங்கும் ஒரு மத்திய அரசு அமையவில்லை. இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டுதான் சமூகநீதியில், கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில், உள்கட்டமைப்பு வசதிகளில் முன்னேறி வருகிறோம். நிதி உரிமை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு நாம் இன்னமும் கடுமையாகப் போராட வேண்டிய சூழல்தான் உள்ளது. எனவே, எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்டமுன்னெடுப்புகளை நாம் தொடங்கக்கூடிய நாள்தான், இன்றைய நாள்.

அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துள்ள மத்திய அரசு, அவற்றை எதேச்சாதிகார மனப்பான்மையோடு பயன்படுத்துவதோடு மாநில அரசுகளையும் மதிப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மாநில அரசுகள் மத்திய அரசின் தயவை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றன. இன்னும் எத்தனைக் காலத்துக்குதான் அவர்கள் கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இருப்பது?
இந்த நிலை மாற வேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நம்முடைய நோக்கத்துக்கான விடைதான், மத்திய மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை. சுருக்கமாகச் சொன்னால், பூனைக்கு மணி கட்டியிருக்கிறோம். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக மத்திய அரசு செயல்பட வேண்டும் என்ற நம்முடைய இந்தக் கொள்கைதான் மற்ற மாநிலங்களின் உள்ளத்துக்குள் இருக்கும், வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் கொள்கையாக இருக்கும்.
எனவே, அனைத்து மொழிகள், இனங்கள், மதங்கள், பண்பாடுகள் உள்ளடக்கிய மாநிலங்களில் வாழும் மக்களை அவர்களது உரிமைகளோடு, உணர்வுகளோடு வாழ வைக்கும் உன்னதமான மாநில சுயாட்சிக் கொள்கையை, அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் தங்களது அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் மூலம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
மாநிலங்களின் உரிமைகள் குறித்து, 1963-இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் முழங்கினார். 1967-இல் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியது. மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய 1969-இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வு பெற்ற நீதியரசர் பி.வி.இராஜமன்னார், டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார், பி.சந்திரரெட்டி ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தார். இந்திய நாடே திரும்பிப் பார்த்தது. அந்தக் குழு விரிவாக ஆய்வு செய்து 1971-இல் தனது அறிக்கையை வழங்கியது. இராஜமன்னார் குழு அளித்த முக்கியப் பரிந்துரைகளை இந்த மாமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றினார் தலைவர் கலைஞர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட, மத்திய அரசின் சார்பில், 1983-ல் நீதியரசர் சர்க்காரியா தலைமையிலான ஆணையம், 2000-ஆம் ஆண்டில் வெங்கடாச்சலையா ஆணையம், 2004-ல் நீதியரசர் பூஞ்ச்சி தலைமையிலான குழு ஆகியவை அமைக்கப்பட்டும், அவற்றின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் வழங்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஏமாற்றமே தொடர்கிறது.
இன்னும் சொன்னால், மாநில அரசின் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களைக்கூட, அடுத்தடுத்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே இன்றைய மத்திய அரசால் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம். பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிரப்படும் மத்திய நிதிக் குழுவின் நிதியானது, தொடர்ந்து செம்மையான முன்னெடுப்பு நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது.

இதனையடுத்துதான், இத்தகைய இக்கட்டான சூழலில், கூட்டாட்சிக் கருத்தியலை வலியுறுத்தும் வகையிலும், மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை, கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைச் செய்திடவும் உயர்மட்ட அளவிலான குழு ஒன்றினை அமைப்பது என தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.

இப்படி உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் திரு. குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தருமான திரு. அசோக் வர்தன் ஷெட்டி அவர்களையும், தமிழ்நாடு மாநில திட்டக்குழு மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை கடந்த 16-ஆம் நாள் என்னிடம் வழங்கியது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் மூலமாக மாண்புமிகு பேரவை உறுப்பினர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் நான் சொல்லிக் கொள்வது, “மாநில சுயாட்சி வேண்டும்; மத்தியத்தில் கூட்டாட்சி மலர வேண்டும்!”
இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல; இந்திய நாட்டு மக்களின் வாழ்வியலுக்கும், வளர்ச்சிக்கும் முக்கியமான கோரிக்கை! கூட்டாட்சி என்பது வாழ்வியல் உணர்வு! பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சிதான் அடிப்படை! இதைத்தான் அந்த அறிக்கையும் நிறுவுகிறது. எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.

1994-இல் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “கூட்டாட்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி” என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய கூட்டாட்சிக் கோட்பாட்டை அரசமைப்புச் சட்டத்தின் பண்பாடாகச் சேர்க்க வேண்டும். அதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தமும், சீர்திருத்தமும் தேவை. கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

எனவே, நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை திருத்த முடியும். இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் தொடங்கியாக வேண்டும். அதிகாரமும், வாய்ப்புகளும் ஒரே இடத்தில் குவிந்திருக்கக் கூடாது. அவை பரவலாக்கப்பட வேண்டும். அதற்கான சட்டபூர்வமான வழிகளை இந்த அறிக்கை நமக்கு வழங்கி இருக்கிறது. கூட்டாட்சித் தன்மை கொண்டதாக இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது இந்திய மத்தியத்தைப் பலவீனப்படுத்தாது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

அனைத்து அதிகாரங்களையும் மத்திய பா.ஜ.க. அரசு கபளீகரம் செய்யும் சூழலில், கவர்னர்கள் மூலமாக மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் தடுக்கும் நிலையில், இந்தித் திணிப்பின் மூலமாக, நிதி நெருக்கடிகளின் மூலமாக, தொகுதி மறுவரையறை என்ற சதியால், ஜி.எஸ்.டி.-யால் தமிழ்நாடு அனுபவித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சிதான்.
மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் மத்திய அரசு வலுவாக இருக்கும். மாநிலங்களால்தான் நாட்டுக்கு வளர்ச்சியும், பெருமையும்! கூட்டாட்சிக் கருத்தியல் என்பது மாநிலங்களுக்கான சலுகை அல்ல; நாட்டிற்கான பாதுகாப்பு அரண். இதையெல்லாம் மத்திய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.
கொட்டக் கொட்டக் குனியக்கூடியவர்கள் அல்ல நாம்;
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் உயிலுக்கு உயிர்கொடுப்போம்; தலைவர் கலைஞரின் ஐம்பெரும் முழக்கத்தை நிறைவேற்றிக் காட்டுவோம்;
நம்மைவிட்டால் இதைச் செய்ய யாருமில்லை. நாம் தான் இதைச் செய்ய வேண்டும். நம்மைவிட்டால் இதைச் செய்ய யாருமில்லை. இது வரலாறு வழங்கியிருக்கக்கூடிய வாய்ப்பு. மலர்க மாநில சுயாட்சி! உருவாகட்டும் இந்தியக் கூட்டாட்சி!

மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை தொகுதி-1, 16-2-2026 அன்று அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் நகலை தங்களின் அனுமதியோடு உறுப்பினர்களுக்கு வழங்கிட அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *