ககன்யான் திட்டம்; வீரர்களைப் பாதுகாப்பாகத் தரை இறக்கும் பாராசூட் சோதனை வெற்றி
1 min read
Gaganyaan mission; Parachute test to safely land astronauts successful
19.2.2026
ககன்யான் திட்டத்தில், விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக பூமிக்கு தரை இறக்கும் பாராசூட் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதற்காக பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் சண்டிகரில் செயல்பட்டு வரும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் வசதியில், விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக பூமிக்கு தரை இறக்கும் பாராசூட்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த பாராசூட் ககன்யான் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது அதன் வேகத்தை பாதுகாப்பாகக் குறைக்க உதவும்.
இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது, ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்களாக பார்க்கப்படுகிறது. இந்த சோதனை விண்வெளி வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய முக்கியமான ஒன்றாகும். இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், டிஆர்டிஓ ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த சோதனை நடந்துள்ளது.
டிஆர்டிஓ, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார். அவர் ககன்யான் திட்டத்தில் முக்கிய சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் பணியில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.