திருமணமாகி 6 நாளில் புதுமாப்பிள்ளை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
1 min read
Newlywed commits suicide by jumping in front of train 6 days after marriage
22.2.2026
திருச்செந்தூர் அருகே திருமணமான 6 நாளில் புதுமாப்பிள்ளை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி, ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் இமானுவேல் எடிசன் (வயது 26). இவர் நாலுமாவடியில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கோவில்பட்டியில் வைத்து திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், நேற்று மாலை திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில், அடைக்கலாபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இமானுவேல் எடிசன் அந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மற்றும் ரெயில்வே எஸ்.எஸ்.ஐ. சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி, உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான சில நாட்களிலேயே வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.