சுவாமிமலை கோவிலில் மின்தூக்கிகள் அமைக்கும் பணியில் ஊழல் – அண்ணாமலை குற்றச்சாட்டு
1 min read
Annamalai accuses of corruption in the construction of electric lifts at Swamimalai temple
9.3.2026
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருப்பதாவது:-
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில், புதிதாக இரண்டு மின்தூக்கிகள் அமைக்கும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து, ரூ.3.55 கோடி பணம், இதற்காகச் செலவிட்டுள்ளதாக, திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறது.
சுமார் 60 அடி உயரத்தில் இருக்கும் கோவிலுக்கு, தலா 20 பேர் பயணம் செய்யும் இரண்டு மின்தூக்கிகள் அமைக்க, உண்மையில் ரூ.3.55 கோடி செலவு ஆகுமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.
இந்த மின் தூக்கிகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்க, அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் முற்பட்ட நிலையில், மின்தூக்கிகள் வேலை செய்யவில்லை. மின்தூக்கி வேலை செய்யாததால், அதனை இயக்குபவரை, அமைச்சர் சேகர்பாபு, முதுகில் அறைந்திருக்கிறார்.
பக்தர்களின் காணிக்கை பணம் ரூ.3.55 கோடி செலவிட்டும், இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்தும், மின்தூக்கி வேலை செய்யவில்லை என்றால், இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது?
வயதான பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட மின்தூக்கிகளில் கூட, கமிஷன் அடித்திருக்கிறார்களா? 20 பேர் வரை பயணம் செய்யலாம் என்று கூறியிருந்த நிலையில், 10 பேரைக் கூட தாங்கும் சக்தி, அந்த மின்தூக்கிகளுக்கு இல்லை என்றால், இந்த மின்தூக்கிகளின் தரம் குறித்த கேள்வி எழுகிறது.
இவற்றில் எந்த நம்பிக்கையில், வயதான பக்தர்கள் பயணம் செய்வார்கள்? உடனடியாக, இந்த இரண்டு மின்தூக்கிகளையும் முறையாக தரப் பரிசோதனை செய்து, அறிக்கை வெளியிட வேண்டும். உண்மையில் 20 பேர் எடையைத் தாங்கும் சக்தி இந்த ஒவ்வொரு மின்தூக்கிகளுக்கும் இருக்கிறதா என்பது பக்தர்களுக்குத் தெரிய வேண்டும். மேலும், இதற்காகச் செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.3.55 கோடிக்கான முழு கணக்குகளையும், இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.