சேவாலயாவில் சர்வதேச மகளிர் தினம்
1 min read
International Women’s Day at Sewalaya
9.3.2026
சர்வதேச மகளிர் தினம், 8 மார்ச் 2026 அன்று(நேற்று) சென்னை அடுத்த திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில்
அமைந்துள்ள சேவாலயாவின் மையத்தில் கொண்டாடப்பட்டது. எ ஃபியூச்சர் ஃபார் எவ்ரி
சைல்டு (AFEC) தொண்டு நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைவர் கீதா கோபால்
மற்றும் நிர்வாக இயக்குனர் அனுசூயா ராவ் ஆகியோர் விழாவில் சிறப்பு
விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து
வரும் வழக்கறிஞர் சரஸ்வதி அவர்களும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் கனடா
ஆகிய நாடுகளை சேர்ந்த ஈவ், மார்த்தா மற்றும் அர்ச்சனா ஆகியோரும் பங்கேற்றனர்.
எ ஃபியூச்சர் ஃபார் எவ்ரி சைல்டு என்பது குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர்களுக்கு உயர் கல்வி அளித்து வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படும் நிறுவனம் ஆகும். AFEC சேவாலயாவுடன் இணைந்து இத்திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறது.
விழாவில் பேசுகையில் அனுசூயா ராவ் அவர்கள், “பெண்கள் பல காலமாக பல்வேறு தடைகள் மற்றும் பின்னடைவுகளை சந்தித்துள்ளனர். அநீதிகளுக்கு எதிராக பெண்கள்
பல இடங்களில் போராடினர். பெண்களின் உரிமைகளை காக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.
கீதா கோபால் அவர்கள் தனது உரையில், “என் அப்பாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள்தான். ஆண் குழந்தை இல்லை. ஒருநாளும் நாங்கள் யாரையும் விட குறைவானவர்கள் என்று உணர வைக்கவில்லை. பதினேழு வயதிலேயே என்னை
வெளியூரில் படிக்க அனுப்பினார். பலர் அவரிடம் கேள்வி கேட்டார்கள். ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார். சில நேரங்களில் ஒரே ஒரு மனிதரின் நம்பிக்கை
போதும். ஒருவரை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல. இன்று நாங்கள் உங்களுக்காக அந்த ஒரே மனிதராக இருக்க விரும்புகிறோம். உங்களுள் பலர் மற்றவர்களை விட
மிகவும் சீக்கிரமே பெரிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறீர்கள். சிலருக்கு இழப்புகளும் வந்திருக்கலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டி, நீங்கள் உங்கள் வாழ்க்கையை
உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது மிகப்பெரிய வலிமை. நாளைய உலகம் உங்களைப் போன்ற பெண்களால் தான் உருவாகப் போகிறது” என்று கூறினார்.
வழக்கறிஞர் சரஸ்வதி அவர்கள் பேசுகையில், “சந்தோஷம் நமக்குள்ளேயே இருக்கிறது. யாரையும் முழுமையாக நம்புவதற்கு முன் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்”, என்று கூறினார்.
தன்னார்வலர் அர்ச்சனா பேசுகையில் “எங்கள் நாட்டிலும் பெண்கள் பல தடைகளை கடந்து பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர். நானும் அவர்களை போல் பல சாதனைகளைப் படைப்பேன்” என்று கூறினார். தன்னார்வலர்கள் ஈவ் மற்றும் மார்த்தா பேசுகையில் “ஆண்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் பெண்களால் செய்ய முடியும். பல துறைகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்” என்று கூறினார்.
ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் சேவாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்து வெளியிடும் மாதாந்திர கையெழுத்து இதழான ‘விடியல்’ வெளியிடப்பட்டது. முன்னதாக மாணவர்களுக்கு ஊக்க மனநிலை பற்றிய ஒரு காணொளி ஒளிபரப்பப்பட்டது.
முன்னதாக, சேவாலயாவின் ஈ.ஆர்.பி. துறைத் தலைவர் சுஜாதா பெ அவர்கள் வரவேற்புரை வழங்கி பேசினார்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்ற
பாரதியாரின் கவிதையை முன் மொழிந்து, சிறப்பு விருந்தினர் அவர்கள் நமது சேவாலயா நிறுவனத்தின் மூலம் பல பெண் குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றனர்” என்று கூறி,
சேவாலயாவின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
மாணவ மாணவியர்
வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை இல்லங்கள் மற்றும் பண்புக்கல்வி துறைத் தலைவர்
காஞ்சனா வழங்கினார். நிறைவாக சேவாலயாவின் கல்வித் துறைத் தலைவர் விஜயா நன்றியுரை வழங்கினார்.
சர்வதேச பெண்கள் தினம், சேவாலயாவின் அம்பத்தூர், உத்திரமேரூர், தர்மபுரி, ஜமீன் எண்டத்தூர் மற்றும் தஞ்சாவூர் மையங்களிலும் கொண்டாடப்பட்டது.
சேவாலயா 1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் 60 க்கும் மேற்பட்ட மையங்களில் செயல்பட்டு வரும் சேவாலயா, பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குகிறது. மேலும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும்
நடத்துகிறது. குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள், கோசாலைகள், இயற்கை விவசாய
பண்ணைகள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களும் சேவாலயா மூலம்
நடத்தப்படுகின்றன. இது தவிர, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, பேரிடர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
சேவாலயாவின் அனைத்து சேவைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 38 ஆண்டுகளில் 18.78 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் சேவாலயா பங்காற்றியுள்ளது.