அரபு நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு லெபனான் கண்டனம்
1 min read
Lebanon condemns Iran’s attacks on Arab countries
9.3.2026
லெபனான் வெளிவிவகார துறை மந்திரி யூசெப் ரக்கி, அரபு நாடுகள் கவுன்சிலின் வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வளைகுடாவிலுள்ள அரபு நாடுகள், ஜோர்டான் மற்றும் ஈராக் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களுக்கு லெபனான் சார்பில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தேன் என கூறியுள்ளார்.
இதுபோன்ற பகைமையான செயல்கள் சர்வதேச விதிகள் மற்றும் தரநிலைகளை மீறும் செயலாகும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினேன் என்றார். இதேபோன்று, ஈரானை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டு லெபனானின் உச்சபட்ச நலன்களை புறக்கணிக்கும் வகையில் மீண்டும் ஹிஸ்புல்லா செயல்பட்டு கொண்டிருக்கிறது. போரில் எந்த பங்கும் இல்லாத லெபனானை போருக்குள் இழுக்கிறது. இது வருத்தத்திற்குரியது.
இதனால், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை தூண்டி விட்டு, லெபனானின் நகரங்களின் மீது தாக்குதல் நடத்தும் நிலையை உருவாக்கி உள்ளது. அதனால், ஹிஸ்புல்லா அமைப்பு உடனடியாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இதற்கான முடிவு லெபனான் அரசின் அவசரகால கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த சூழலில், ஈரானுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ஆதரவு பெற்ற இதன் தாக்குதலால், லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுபற்றி லெபனான் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களை இலக்காக கொண்டு இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியது. இதில், 15 பேர் பலியாகி உள்ளனர். 15 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட, ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல்களை நடத்துவோம் என அறிவித்து உள்ளது. இதனால், லெபனான் தலைநைகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.