June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சிலிண்டர் தட்டுப்பாடு: அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு

1 min read


Cylinder shortage: Central government implements Essential Commodities Act

10/3/2026
ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது.

மேலும் சிலிண்டர் விநியோகத்தில் வீட்டு உபயோகத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் வழங்குவதற்கான வழிமுறை குறித்து ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களிலும் ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பல டீலர்களும் நேற்று முதலே உணவு விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக கர்நாடகாவில் ஏற்கனவே ஓட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அங்கு நூற்றுக்கணக்கான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

அங்குள்ள இந்திரா நகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு பகுதிகளில் உணவகங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதனால் ஐடி ஊழியர்கள், மாணவர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டு சிலிண்டர் கையிருப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு அமல் படுத்தி உள்ளது. இதன்படி பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் கிடைக்கும் தன்மை, வழங்கல் மற்றும் சமமான விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 ஐ செயல்படுத்தி உள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (ECA) மத்திய அரசு அமல்படுத்தினாலும் மாநில அரசுகள் அதனை செயல்படுத்தும் அதிகாரம் பெற்றுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமலானதால் அனைத்து oil refineries – களும் LPG உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

LPG தயாரிக்க பயன்படும் ப்ரோப்பேன் (Propane) மற்றும் பியூட்டேன் (Butane) ஆகியவற்றை பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் LPG Indian Oil Corporation, Bharat Petroleum – BPCL, Hindustan Petroleum – HPCL ஆகிய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

LPG வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சிலிண்டரை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தலை தடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *