திமுக அரசை மக்கள் நம்ப மாட்டார்கள் – எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min read
People will not trust the DMK government – Edappadi Palaniswami speech
11.3.2026
திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை வணங்கி பரப்புரை கூட்டத்துக்கு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு இதே திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு நடந்தபோது, நமது கூட்டணி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து அற்புதமான கூட்டணியை தமிழகத்தில் அமைத்திருக்கிறது. இது வலுவான கூட்டணி; வெற்றிக் கூட்டணி.
பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலும், வார்த்தை போர்களுக்கு மத்தியிலும்தான் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கின்றன. காங்கிரசிடம் கெஞ்சி கூட்டணி வைத்திருக்கிறது திமுக. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் பரஸ்பர உணர்வோடு இணைந்திருக்கிறோம். எத்தனை முறை எங்கு கூட்டம் போட்டாலும் திமுக அரசை மக்கள் நம்ப மாட்டார்கள்.
திமுக தேர்தல்களுக்காக மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகிறது. திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நடக்கப் போவது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்; இதை மறந்து டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி என்று ஸ்டாலின் பேசி வருகிறார். 10 ஆண்டுகளாக பொற்கால ஆட்சியை அதிமுக கொடுத்தது. அனைத்து தரப்பினரும் கொண்டாடும் அரசாக அதிமுக அரசு இருந்தது.
திமுக கூட்டணியில் அனைவருக்கும் ஒரே கொள்கை என்கிறார் ஸ்டாலின். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் ஒரே கொள்கையா? திமுக கொள்கையும், கம்யூனிஸ்ட் கொள்கையும் ஒன்றா? ஒரே கொள்கை என்றால் தனித்தனி கட்சிகள் எதற்கு? பல கொள்கைகள் கொண்ட கட்சிகள்தான் திமுக கூட்டணியில் உள்ளன. ஆனால் ஒரே கொள்கையின் கீழ் கூட்டணியில் இருப்பதாக ஸ்டாலின் பேசிவருகிறார். திமுக கூட்டணியில், கூட்டணிக் கட்சிகள் அடிமையாக உள்ளன.
மோசமான, கையாலாகாத திமுக அரசை அகற்றுவதுதான் எங்களுடைய கூட்டணியின் நோக்கம். திமுக ஒரு குடும்ப கட்சி; கார்ப்பரேட் கம்பெனி. இந்த தேர்தல் தான் கருணாநிதி குடும்பத்துக்கு இறுதி தேர்தல். இவ்வாறு அவர் கூறினார்.