June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

சிபிஐ விசாரணையை சென்னையிலேயே நடத்த வேண்டும்: விஜய் கடிதம்

1 min read

CBI investigation should be conducted in Chennai: Vijay’s letter

16/3/2026

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அவர் கரூருக்கு சென்றார். அங்கு வாகனத்தின் மேற்கூரையில் நின்று பேசினார். அவரை பார்ப்பதற்காக அங்கு பெருங்கூட்டம் கூடியிருந்தது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து முதலில் தமிழக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. பின்னர் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த வழக்கை மத்திய புலனாய்வு நிறுவனம் விசாரணைக்கு எடுத்தது.சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கை தாங்கள் எடுத்ததில் இருந்து இதுவரை பல்வேறு கோணங்களில் பல கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளனர். சம்பவ இடத்துக்கும் சென்று கள ஆய்வு நடத்தினர். பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. த.வெ.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகளை டெல்லிக்கு வரவழைத்தும் விசாரித்தனர்.

இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய்க்கும் 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. இதன் பேரில் அவர் கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் விசாரணைக்காக ஆஜராகினார். முதல் நாளில் அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொள்குறி வகை வினாக்கள் அவரிடம் கேட்கப்பட்டன. இந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இரண்டாவது விசாரணை 5 மணி நேரம் நடைபெற்றது. அப்போது முந்தைய பதில்களுக்கு விளக்கங்கள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இதில் போலீஸ் பாதுகாப்பிலேயே குறைபாடுகள் இருந்ததாக விஜய் கூறியுள்ளார்.

இதோடு விஜய்யிடம் விசாரணை முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். கடந்த 10-ந் தேதி அவர் அழைக்கப்பட்டார். ஆனால் அன்றைய தினம் விஜய் ஆஜராகவில்லை. விஜய் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 15-ந் தேதி விசாரணைக்கு வர மறு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று விஜய் நேற்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். இதற்காக நேற்று முன்தினமே அவர் டெல்லி வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் ரேஞ்ச் ரோவர் காரில் சி.பி.ஐ. அலுவலகத்துக்குள் நுழைந்தார். அவர் கருப்பு நிற சட்டை அணிந்திருந்தார்.உள்ளே சென்ற அவரிடம் காலை 11 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று விசாரணை முடிந்த உடனே விஜய் சென்னை புறப்பட்டார். இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணையை இனி சென்னை அல்லது தமிழ்நாட்டின் வேறு ஏதாவது ஒரு இடத்தில் நடத்த வேண்டும் என்றும் விஜய் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 14-ஆம் தேதி இந்த கடிதத்தை விஜய் எழுதியுள்ளார். சி.பி.ஐ. மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கு விஜய் தரப்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *