திருப்பதி கோவிலில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம்
1 min read
Chandrababu Naidu visits Tirupati temple
21.3.2026
ஆந்திர பிரதேச முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு அவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக இரண்டு நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருமலை வந்தடைந்தார். இந்த பயணம் வெறும் ஆன்மீக தரிசனமாக மட்டுமின்றி, பக்தர்களுக்கான சேவை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான பயணமாகவும் அமைந்தது.
ஆந்திர பிரதேச முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு திருமலையில் உள்ள காயத்ரி சதன் ஓய்வு இல்லத்திற்கு வந்தார். அவரை தேவஸ்தானத்தின் தலைவர் திரு. பி.ஆர். நாயுடு அவர்கள் நேரில் வந்து வரவேற்றார். இன்று அதிகாலையில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தனது பேரன் தேவன்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு தரிசனத்திற்கு வந்ததாக தெரிவித்தனர்.
திருமலைக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்கதர்களுக்கு ஒரு நாள் முழுவதுமான இலவச உணவு சேவையை வழங்குவதற்காக, முதல்-மந்திரியின் குடும்பத்தினர் ரூ. 44 லட்சம் தொகையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
தரிசனத்திற்கு பிறகு, வெங்கமாம்பா நித்ய அன்னதான வளாகத்திற்கு முதல்மந்திரி வருகை தந்தார். அங்கு உணவருந்தி கொண்டிருந்த பக்தர்களுக்கு முதல்மந்திரி அவர்களே காலை உணவை பரிமாறினார்.
பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் இணைந்து கோவிலில் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய நீர் மற்றும் உணவு பகுப்பாய்வு ஆய்வகம் மற்றும் மாநில உணவு ஆய்வகத்தை அவர் திறந்து வைத்தார். இதன் மூலம் திருமலையில் வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீரின் தன்மை சர்வதேச தரத்தில் உறுதி செய்யப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், தாமே நேரடியாக சேவையில் ஈடுபட்ட முதல்மந்திரின் இந்த செயல், திருமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வியாழன் அன்று 57 ஆயிரத்து 272 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 23 ஆயிரத்து 842 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.3 கோடியே 37 லட்சம் ஆகும்.