தென்காசியில் தேர்தல் செலவுகள் கண்காணிப்பு குழுவுடன் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை
1 min read
Election observer consults with election expenditure monitoring team in Tenkasi
21.3.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21.03.2026) சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் செலவுகளை கண்காணிப்பது தொடர்பாக வங்கியாளர்கள், அஞ்சல் துறை, வணிகவரி, வருமான வரி. டாஸ்மாக் ஆகிய தேர்தல் செலவின கணக்கிட்டுக் குழுவினர்களுடன்தென்காசி மாவட்டத்திற்கென நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் அசோக் கௌதம்,அபய்காந்த் ராஜ்குமார் சிங், தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே. கமல் கிஷோர் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு தேர்தல் வேட்பாளர்களுக்கு வங்கி கணக்கு திறப்பதற்கு காசோலை புத்தகங்கள் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரூ.10 இலட்சத்திற்கு மேல் சந்தேகத்திற்குரிய வங்கி பணப்பறிமாற்றம் நடைபெற்றால் தகவல் தெரிவிக்கும்படியும். ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களுடன் பணப்பரிமாற்றம் செய்யும்படியும். பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களில் உள்ள பணியாளர்களுக்கு அவர்களுடைய அமைப்புகள் நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை கண்டிப்பாக எடுத்துச் செல்லும்படியும். வேட்பாளர் வங்கி கணக்கில் நடைபெறும் அனைத்து பணப்பரிமாற்றத்தினை கண்காணிக்கும்படியும், தேர்தல் பணிக்காக பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க போதுமான அலுவலர்களை நியமிக்கவும். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பணப்பரிமாற்றம் நடைபெற்றால் உடன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட வனஅலுவலர் முனைவர் ரா.ராஜ்மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட கருவூல அலுவலர் தவமணி, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் கணேசன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) வனிதா மற்றும் வங்கி மேலாளர்கள், வணிகவரி. வருமான வரி, அஞ்சல் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.