June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

புதிய வருமானவரி சட்டம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்- மத்திய அரசு அறிவிப்பு

1 min read

New Income Tax Act to come into effect from April 1

21.6.2026
நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

60 ஆண்டுகள் பழமையான ‘வருமான வரிச் சட்டம் 1961’-ஐ திருத்தி மாற்றும் வகையில், புதிய வருமான வரிச் சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந்தேதி பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி ‘வருமான வரி விதிகள் 2026’ என்ற பெயரிலான இந்த விதிகள், ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பழைய வரி நடைமுறையில் இருந்த பல குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் வருமான வரி கணக்கு தாக்கலை எளிமையாக்கும் வகையில் இந்த புதிய வரி சட்டம் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதில் புதிய வரி விகிதங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை. கடினமான வருமான வரிச் சட்டங்களை வரி செலுத்துவோர் எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சட்டத்தின் மொழி நடை மட்டும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலையடுத்து இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது.

இதில் சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819-ல் இருந்து 536-ஆகவும், சட்டத் தொகுதிகளின் எண்ணிக்கை 47-ல் இருந்து 23-ஆகவும் புதிய சட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கு மாற்றாக வரி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு படிவம் 33 என்ற படிவத்தில் தொடங்கி 150-க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டிலுமே வரி தாக்கல் செய்யலாம்.

புதிய வரி சட்டத்தில் மாத சம்பளதாரர்களுக்கு எச்.ஆர்.ஏ. எனப்படும் வீட்டு வாடகைப் படிக்கான வரிச் சலுகைகள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. ஆனால் வீட்டு உரிமையாளர்-வாடகைதாரர் இடையேயான உறவு குறித்த விவரங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி நகரங்களில் வசிப்பவர்கள் மட்டுமே சம்பளத்தில் 50 சதவீதம் வரை குறிப்பிட்டு வீட்டு வாடகைப்படிக்கான வரி விலக்கு பெறலாம் என இருந்த நிலையில் தற்போது ஐதராபாத், பெங்களூரு, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் இது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 40 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும்.

திருமணம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்கள் அல்லது ஓட்டல் மற்றும் உணவக கட்டணங்கள் ரூ.1 லட்சத்தை தாண்டினால் பான் கார்டு எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி ரூ.50 ஆயிரத்தை தாண்டினால் பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில், செலவு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல, எந்தவொரு அசையா சொத்து வாங்கும் போது, விற்பனை செய்யும் போது, பரிசளிக்கும்போதும் அதற்கான மொத்த செலவு ரூ.10 லட்சமாக இருந்தால் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது இது ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வருமான வரிச் சட்டம், வரி தொடர்பான வழக்குகளைக் குறைக்கவும், டிஜிட்டல் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து வரி செலுத்துவதை எளிதாக்கவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *