June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

சட்டசபை தேர்தலில் மநீம போட்டியில்லை: கமல் அறிவிப்பு

1 min read


Kamal announces that he will not contest the Assembly elections.

24.3.2026
வரும் சட்டசபை தேர்தலில் மநீம போட்டியிடாது என அக்கட்சி தலைவர் கமல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த லோக்சபா தேர்தலில், தேச நன்மைக்காக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் ராஜ்யசபாவில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதல்வர் , துணை முதல்வர், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.
இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.
அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எப்படியாவது தமிழகத்தை கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட. ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்.

தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை.
தேர்தல் அரசியலில் யாருமே இப்படி செய்ததில்லையே என்று கேட்பீர்களானால், ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன். முதல்வர் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே. தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழகம்தான் என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக் கொடுத்திருக்கிறேன்.

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு, திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இன்றைய தேவை. இது வெறும் ஆட்சி மட்டுமல்ல. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நீதிபரிபாலனம்.
ஆகவே 2026 தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம்.
என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, ஒன்பது ஆண்டுகளாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் சுயநலமற்ற அரசியலுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணங்கள். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதை.அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. மண்ணுக்கான, மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் எப்போதும்போல் தீரத்துடன் தொடரும்.

மிக விரைவில், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பதவியேற்பு விழாவில் அவரை மகிழ்ச்சியோடு நாம் சந்தித்து வாழ்த்துவோம் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு நிருபர்களை சந்தித்த கமல் கூறியதாவது:-
இப்போது நம்முடைய நாட்டிற்கான முக்கியமான போராட்டத்தில் தமிழகம் முன்னணியில் நிற்கிறது. அதற்கு உறுதுணையாக நிற்க வேண்டியதுதான் எனது கடமை என முடிவு செய்து பல நாட்கள் ஆகிவிட்டது. பாரத்ஜோடோ யாத்திரை முதல் இங்கு கை கொடுத்தது முதல் எங்கள் கடமையாக நினைக்கிறேன்.

எனக்கு அரசியல் தொழில் அல்ல . கடமை. அப்படித்தான் அனைவரும் இருக்க வேண்டும். எத்தனை தலைவர் இப்படி செய்தார்கள் என கேட்க மாட்டேன். சவால் விட மாட்டேன். நான் செய்திருக்கிறேன். அதுதான் நான் நம்பும் அரசியல் சுயநலமற்றதாக கடமையாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் அது அப்படி இருக்கவேண்டும் என அரசியலில் நம்பி வந்தவன் நான்.
இந்த பயணத்தில் நடந்து கொண்டு இருக்கிறேன். இந்த முயற்சி, இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள், தமிழ் குடிமகனின் உரிமை. அந்த நிலையிலும், கட்சி தலைவன் என்ற முறையிலும் இந்த ஆட்சி மீண்டும் மலர வேண்டும். தொடர வேண்டும் என்பது தான். அது என் முடிவு. என்னுடன் தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டிருக்கும் தொண்டர்கள் இன்றும் என்னுடன் இருக்கிறார்கள்.

எனது அறிவுரைகள் கட்டளைகளாக ஏற்றவர்கள், எனது அறிவுரைகள் எல்லாம் கட்டளைகளாக ஏற்றவர்கள் கேள்விகேட்டு பதில் பெற்றவர்கள் தொடர்ந்து நடை போட்டு கொண்டு இருக்கின்றனர். 9 ஆண்டுகள் தொடர்ந்து அழுத்தமாக பயணித்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி சொன்னால் அந்நியமாக நினைத்து விடுவார்கள். நான் சொல்லிக் கொள்கிறேன்.

வெற்றி பெற்ற பிறகு எங்கள் தோள்களின் திணவு குறைந்து இருக்கும். அனைவரையும் பாராட்டுவோம். நன்றி சொல்வோம். முதல்வரை சந்தித்த போதும், உங்களை நான் ஆட்சி கட்டிலில் பார்க்கிறேன் என வாழ்த்த கூட இல்லை. எதிர்பார்ப்பு எங்களுக்கு . அதை நடத்தி காட்டுங்கள் என சொல்லி வந்தேன். குடிமகனாகவும், கட்சியின் தலைவனாகவும் சொல்லிவிட்டு வந்தேன்.

நாங்கள் அவர்களேடு நிற்போம் எத்தனை தொகுதி என எண்ணவில்லை. யார் என்ன சொன்னாலும் இதுதான் நிலைப்பாடு. கட்சி தொண்டர்களோடு ஆலோசித்து முடிவு. வெளியில் இருந்து ஆதரவு கொடுப்போம். அழுத்தமான ஆதரவாக இருக்கும்.நேர்மைக்கு அக்னி பரிட்சை கிடையாது. கற்புக்கு இருக்கக்கூடாது என நினைப்பவர்கள். நேர்மை தீ போன்றது. அது பரவட்டும். நெருக்கடி என்பது தமிழகத்துக்கே வந்துள்ளது. கட்சிக்கு அல்ல. என்ன நெருக்கடி என கேட்காதீர்கள் நீங்கள் புரிந்து கொண்டு செல்ல வேண்டும்.
சுயமரியாதை பற்றி அவர்களுக்கு தெரியாததா. அதை நான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு தெரியும். என்னை பெரு மரியாதையுடன் நடத்தி கொண்டு இருக்கிறார்கள் . நடத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களுடன் நிற்பது பெருமையாக மட்டும் அல்ல. கடமையாகவும் நினைக்கிறேன்.
இவ்வாறு கமல் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *