June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ராஜபாளையத்தில் வேட்புமனு தாக்கல்; கலெக்டர் ஆய்வு

1 min read

Collector inspects nomination filing activities in Rajapalayam

4/4/2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் மற்றும் வேட்புமனு தாக்கல் நடைமுறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ. சுகபுத்ரா இன்று (04.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்:-

இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேட்புமனு தாக்கல் மையத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கு வேட்பாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் 100 மீட்டர் எல்லைக்குள் வாகனக் கட்டுப்பாடு குறித்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டுமென அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 30.03.2026 (திங்கட்கிழமை) அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

வரும் 06.04.2026 (திங்கட்கிழமை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

வேலை நாட்களில் காலை 11:00 மணி முதல் மாலை 03:00 மணி வரை மட்டுமே மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்), 01.04.2026 (புதன்), 03.04.2026 (வெள்ளி) மற்றும் 05.04.2026 (ஞாயிறு) ஆகிய நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 ஆகும்.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எவ்விதத் தொய்வுமின்றிப் பின்பற்ற வேண்டும் என்றும், வேட்புமனு தாக்கலின் போது தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்கவும், போதிய காவல்துறை பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வட்டாட்சியர் மற்றும் தேர்தல் பிரிவு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *