தமி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு
1 min read
Filing of nominations for the Tamil Nadu Assembly elections ends today
6/4/2026
தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் தேசிய கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு தேசிய கட்சியான பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மற்றொரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க. ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இதனால், தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.
இதனை தொடர்ந்து, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டன. வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு, பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந்தேதி தொடங்கியது. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதன்படி, 3,196 ஆண்கள், 800 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3,997 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால், 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் கிடைத்திருந்தது.
இன்றைய தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைமுருகன், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மனு தாக்கல் செய்தனர். மத்திய மந்திரி எல்.முருகன், அமைச்சர் காந்தி, தமிழிசை சவுந்தரராஜன், விஜய பிரபாகரன் உள்ளிட்டோரும், விருத்தாசலத்தில் பிரேமலதா, தர்மபுரியில் சவுமியா அன்புமணி ஆகியோரும் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 9-ந்தேதி கடைசி நாள் ஆகும். வாக்கு பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னங்களை பொருத்தும் பணிகள் 10-ந்தேதி தொடங்கும்.