ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்கள் நிறுத்தம்- டிரம்ப் அறிவிப்பு
1 min read
Trump announces 2-week pause in attacks on Iran8.4.2026
ஈரான் 10 அம்ச அமைதித் திட்டத்தை முன்வைத்துள்ள நிலையில், அது செயல்படுத்தக்கூடியது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது திட்டமிடப்பட்டிருந்த குண்டுவீச்சு தாக்குதல்களை, 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து, ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி கெடு விதித்திருந்தார். இன்று இரவு 8 மணிக்குள் (இந்திய நேரப்படி, காலை 5.30 மணி) உடன்பாடு எட்டப்படாவிடில், ஈரானில் பாலங்கள் இருக்காது; மின் நிலையங்கள் இருக்காது; அவர்கள் கற்காலத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் அணுசக்தி விவகாரங்கள் தொடர்பாக, 10 அம்ச திட்டத்தை அமெரிக்காவுக்கு, ஈரான் முன்மொழிந்துள்ளது. இதன் அம்சங்களை பரிசீலித்து, ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
மேலும், ஈரானின் 10 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகவும், ஈரானுடனான பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கவும், அடுத்த 14 நாட்களுக்கு (2 வாரங்கள்) எந்தவிதமான வான்வழித் தாக்குதல்களும் நடத்தப்படாது என்றும், அமெரிக்க அதிபர் உறுதி அளித்துள்ளார். இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தை குறைத்துள்ளது.