கடையம் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து விரயமாகும் குடிநீர்
1 min read
Water is being wasted due to a broken water pipe on Kadayam Road.
12.4.2026
தென்காசி மாவட்டம் கடையத்தில் சாலைக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதோடு சாலை உடைந்து சாலையின் நடுவில் பெரும் பள்ளம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் அமைந்துள்ள கடையத்தின் இதயப் பகுதியில் இரண்டு வாரங்களாக சாலைக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள தாமிரபரணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் விரயமாகி கழிவுநீர் ஓடையில் கலப்பதோடு கடையம் பகுதியின் முக்கிய சாலையான இச்சாலை உடைந்து சாலையின் நடுவில் பெரும் பள்ளம் ஏற்படும் அபாய கட்டத்தில் உள்ளது. சாலை உடையும் பட்சத்தில் கடையம் வழியாக அம்பாசமுத்திரம், களக்காடு, நாங்குநேரி, நாகர்கோயில், திருநெல்வேலி போன்ற ஊர்களுக்கு செல்லும் போக்குவரத்து மொத்தமாக ஸ்தம்பிக்கும். கடையம், தென்காசி மற்றும் திருநெல்வேலி மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவ பயனாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகள் இச்சாலையில் செல்வது கேள்விக்குறியாகும். மேலும், இச்சாலை குறுகிய சாலை என்பதால் இப்பகுதி வழியாக பயணிக்கும் அனைத்து தரப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும் அவல நிலை உருவாகியுள்ளது.
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவது இப்பகுதியில் மட்டுமல்லாமல் இச்சாலையின் பல பகுதிகளிலும் குடிநீர் குழாய்கள் உடைந்து மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ முக்கிய ஆதாரமான குடிநீர் விரயமாகி சாலையிலும் சாக்கடையிலும் கலந்து வீணாகிறது.
மேலும், தற்போது கோடை காலமாதலால் குடிநீர் தேவை அதிகமாகி வருகிறது. அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. எனவே, தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்படும் அபாயமும் உள்ளது. இப்படியொரு இக்கட்டான சூழலை மக்கள் எதிர்நோக்கியுள்ள காலகட்டத்தில் குழாய் உடைப்பினால் நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் குடிநீர் உடைந்து வெளியேறி விரயமாகி சாலையிலும் கழிவுநீர் கால்வாயிலும் கலந்து வீணாவதை காணும் கடையம் பகுதி மக்களும் சமூகநல ஆர்வலர்களும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யும் மனநிலையில் உள்ளனர்.
எனவே, போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்து மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான குடிநீர் வீணாவதை தடுத்து தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதிலிருந்து தங்களையும் சக உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டுமென பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்தல் ஜுரத்தில் வாக்கு சேகரிப்பில் பறந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு வழக்கம்போல் மக்கள் நலனில் அக்கறையில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை
அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் காத்திருக்கின்றனர்.
-ஜோசப் , நிருபர்