June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

“ஒரு நாள்” மந்திரிகள்

1 min read

“One Day” Ministers

22/4/2026
இந்திய வரலாற்றில் ஒரு நாள் மந்திரிகள் யாராவது இருந்ததுண்டா என்று கேட்டால், “ஆம்” என்பதே உறுதியான பதில்.
யார் அவர்கள்?
தமிழ்நாடு-புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள்!
எந்தக் கட்சி?
அதிமுக!
ஆச்சரியமாக இருக்கிறதா?
அவர்கள் வேறு யாருமல்ல;
1) சத்தியவாணிமுத்து
2) பாலாபழனூர்
இவர்கள் ஒரு நாள் மந்திரிகளாக இருந்ததை தெரிந்து கொள்ள 1977-ம் ஆண்டுக்கு ‘டைம் டிராவல்’ பண்ணி பின்னோக்கிச் செல்வோம்.
பிரதமர் இந்திராகாந்தி எமர்ஜென்சி கொண்டு வந்து எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கியதால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட வெவ்வேறு எதிர்க்கட்சிகள் ‘ஜனதா’ என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு, 1977 நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து, இந்திராகாந்தியை தோற்கடித்தும் காட்டினர். அந்தத் தேர்தலில் ஜனதா கட்சி 298 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இ.காங்கிரஸ் 154 இடங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது.
இதையடுத்து மத்தியில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. 81 வயதில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார்.
ஒரு சில மாதங்கள் எல்லாம் நன்றாகப் போனது. அதன்பின் ஜனதாவாக இணைந்திருந்த கட்சிகள் பதவி ஆசையில் அடித்துக்கொள்ளத் தொடங்கி விட்டன.
அதிலும், துணைப்பிரதமராக இருந்த “லோக் தளம்’ தலைவரான சரண்சிங் பிரதமர் ஆக ஆசைப்பட்டார்.
இந்த அடிதடிகளை சமாளிக்க முடியாமல் 1979 ஜூலை 28-ல் மொரார்ஜிதேசாய் ராஜினாமா செய்து விட்டார்.
ஜனதாவாக ஒருங்கிணைந்து இருந்த கட்சிகள் சிதறி விட்டன.
இதையடுத்து, லோக் களம் தலைவர் சரண்சிங் ஆட்சி அமைத்தார். அவருக்கு தனி மெஜாரிட்டி கிடையாது. இ.காங்கிரஸ் ஆதரவைப் பெற்று கூட்டு மந்திரிசபை அமைத்தார்.
1979 ஜூலை 28ல் பிரதமர் பதவி ஏற்ற அவர், தன் பலத்தைப் பெருக்கிக் கொள்ள அதிமுக ஆதரவை நாடினார். (அப்போது அதிமுகவிடம் 17 எம்பிக்கள் இருந்தனர்).
சரண்சிங்கின் வேண்டுகோளை ஏற்று அவரை ஆதரிக்க எம்ஜிஆரும் தயாரானார்.
(எம்ஜிஆர் மத்திய அரசுடன் மோதுவதில்லை. இந்திராவுடன் கூட்டு சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர், இந்திரா தோற்று மொரார்ஜி பிரதமர் ஆனதும் அவரை ஆதரித்தார். அடுத்து மொரார்ஜியை கவிழ்த்து விட்டு பிரதமர் ஆன சரண்சிங்குக்கும் ஆதரவு அளித்து விட்டார்).
அதிமுகவின் ஆதரவுக்கு கைமாறாக இரு மந்திரி பதவி அளிக்க சரண்சிங் முன்வந்தார். அப்போது தேர்வானவர்கள் தான் சத்தியவாணிமுத்துவும், பாலாபழனூரும்.
திமுகவில் இருந்து விலகி வந்த சத்தியவாணிமுத்துவுக்கு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி பதவி அளிக்கப்பட்டு இருந்தது.
பாலாபழனூர் 1977ல் புதுச்சேரி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
இவர்கள் இருவரும் 1979 ஆகஸ்டு 19-ந் தேதி கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
சத்தியவாணிமுத்துவுக்கு சமூக நலத்துறையும், பாலாபழனூருக்கு பெட்ரோலியத்துறையும் ஒதுக்கப்பட்டன.

இவர்கள் பதவி ஏற்ற மறுநாளே (ஆக 20) நாடாளுமன்றத்தில் சரண்சிங் பலப்பரீட்சையை சந்திக்க நாள் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்பே சரண்சிங்குக்கு அளித்து வந்த ஆதரவை இந்திரா காந்தி வாபஸ் பெற்றார். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே சரண்சிங் ராஜினாமா செய்தார்.
இதனால் சரண்சிங்கின் 24 நாள் ஆட்சி கவிழ்ந்தது.
முந்திய நாள் தான் பதவி ஏற்ற அதிமுக மந்திரிகள் இருவரும் ஒரே நாளில் பதவி இழந்தார்கள்.

இதை விமர்சித்து, துக்ளக் சோ தனது முகமது பின் துக்ளக் நாடகத்தில் ஒரு காட்சி அமைத்து, “ஒரு நாள் மந்திரிகள்” என்று கிண்டல் அடித்திருந்தார்.
சரண்சிங் ஆட்சி கவிழ்ந்தபின் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு 1980ல் அடுத்த தேர்தல் நடந்தது. (அதுவரை காபந்து பிரதமராக சரண்சிங் நீடித்தார்).
மொத்தத்தில் 1977ல் தன்னை வீழ்த்திய ஜனதா கட்சியை இந்திரா தந்திரமாக பழி வாங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மொரார்ஜியை கவிழ்க்க சரண்சிங்கை ஆதரித்தார். பின்பு சரண்சிங்கை ஆட்சியில் உட்கார வைத்து அவரையும் கவிழ்த்து விட்டார்.

அடுத்து, 1980 தேர்தலை ‘நிலையான ஆட்சி’ கோஷத்துடன் சந்தித்து வெற்றியும் பெற்று மீண்டும் பிரதமர் ஆகி விட்டார்.

தமிழ்நாட்டில் அய்யாறு வாண்டையார்

தமிழ்நாட்டில் ஒரு மாதம் கூட அமைச்சர் பதவியை முழுமை செய்ய முடியாமல் போனவர், அய்யாறு வாண்டையார்.
2001 தேர்தலில் திருவையாறு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், மே 14-ந் தேதி ஜெயலலிதா அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். அமைச்சர் பதவி ஏற்று முதல் முறையாக சொந்த ஊரான தஞ்சாவூர் திரும்பிய அவருக்கு தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. வாண்டையார் குடும்பம் என்பதால் சாரட் வண்டியில் அமர வைத்து அவர் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார்.
இதுவே அவருக்கு பாதகமாக முடிந்தது.பதவி ஏற்ற 27 நாளில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு விட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *