பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகள்
1 min read
The Achievements of Great Leader Kamaraj
15.7.2026
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரில் குமாரசாமி – சிவகாமி தம்பதியினருக்கு 15.7.1903 அன்று மகனாகப் பிறந்தார். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 1919-ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார்.
1930-ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். அதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். 1936-ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1940-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திறம்பட பணியாற்றினார். மேலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், விருதுநகர் நகரமன்றத் தலைவராகவும், பலமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினார்.
1954-ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தனது 9 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தின் கல்வி, தொழில், நீர்ப்பாசனம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்திட பெரும்பங்காற்றினார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏதுவாக, இலவச மதிய உணவுத் திட்டத்தினை 1956-ஆம் ஆண்டில் கொண்டுவந்தார்.
காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் மணிமுத்தாறு அணை, வைகை அணை, அமராவதி அணை, கீழ்பவானி அணை, சாத்தனூர் அணை, கிருஷ்ணகிரி அணை, பரம்பிக்குளம் அணை, ஆரணியாறு அணை, புள்ளம்பாடி அணை மற்றும் வீடூர் அணை போன்ற பல்வேறு அணைகளை உருவாக்கி நீர்ப்பாசனத்திற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் உறுதுணையாகத் திகழ்ந்தார்.
திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் (பிஎச்இஎல்), நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(என்எல்சி), சென்னை, பெரம்பூரில் ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை (ஐசிஎப்), ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை (எச்விஎப்) போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தவர் காமராஜர் .
1964-ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பெருந்தலைவர் காமராஜர், நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டு முறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். அதனால் அவர் ‘கிங் மேக்கர்’ என்று அழைக்கப்பட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பெருந்தலைவர் காமராஜர், தன் வாழ்நாளில் 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். அவரது மறைவுக்குப்பின் 1976-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.