June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

1033 வேட்பாளர்கள் நின்ற மொடக்குறிச்சிதேர்தல்

1 min read

1033 candidates contesting Modakkurichi by-election

21.4.2026
ஒரே ஒரு தொகுதியில் 1033 வேட்பாளர்கள் நின்ற அபூர்வ தேர்தல் தமிழ்நாட்டில் நடந்ததை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

இது நடந்தது, 1996-ல். அப்போது (2.5.96) நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் திமுக-தமாகா கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்றது. அதே நேரம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
காரணம், அந்த ஒரு தொகுதியில் மட்டும் 1,033 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஏன் அப்படி?
விவசாயிகள் சங்கத்தலைவர் நல்லுசாமி ஏற்பாட்டில் 1,350 விவசாயிகள் படை திரண்டு வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் ஆணையத்தை திணறடித்தனர்.
இதற்கு காரணமாக அவர்கள் முன் வைத்த கோரிக்கைகள்:-

1)வேட்பாளர்கள் டெபாசிட் தொகை ரூ.250 என்பது மிகவும் குறைவு. அது உயர்த்தப்படவேண்டும்.
2) ஒரு வேட்பாளரின் வேட்பு மனுவை ஒருவர் முன்மொழிந்தால் போதும் என்பதை 10 ஆக உயர்த்த வேண்டும்.
3) யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை (நோட்டா) என்ற முறை கொண்டு வரப்படவேண்டும்.
(இதுபோல் அவர்கள் வைத்த கோரிக்கைகள் பற்றி தலைமைத் தேர்தல் ஆணையர் டிஎன் சேஷன் நேரில் வந்து அவர்களோடு பேசி பின்னாளில் நடைமுறைக்கு வந்து விட்டன).

சரி; 1,350 பேர் மனு தாக்கல் செய்த விஷயத்திற்கு வருவோம்.
பரிசீலனையின் போது முடிந்த அளவு மனுக்களை நிராகரிப்போம் என்று பார்த்தால் 331 மனுக்களைத் தான் தள்ளுபடி செய்ய முடிந்தது. 1029 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன.
இவர்களோடு திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அதிமுக, மதிமுக உள்ளிட்ட 1,033 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் நின்றனர்.
இவ்வளவு பேரை வைத்து வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திணறித்தான் போனது. அரசியல் கட்சிகள் தவிர்த்து ஓராயிரத்துக்கு மேற்பட்ட சுயேச்சை சின்னங்களுக்காக படாத பாடு பட்டனர்.
ஒரு பேனா, 2 பேனா, 3 பேனா என்றெல்லாம் சின்னங்களை முடிவு செய்து ஒதுக்கி விட்டனர்.
அடுத்து, வாக்குச்சீட்டு அச்சிடுவதில் அடுத்த சிரமம். 1033 பெயர்களுக்கும் 65 பக்க நோட்டாக வாக்குச் சீட்டு தயாரானது.
அடுத்ததாக, அந்த வாக்குப் புத்தகங்களை எப்படி பெட்டியில் போட முடியும்? அதற்கென்று பெரிய பெரிய பேரல்கள் தயாராயின. எல்லாம் தயாரித்து முடித்து மே 2ல் நடந்திருக்க வேண்டிய தேர்தலை ஜூன் 2- ந் தேதி நடத்தி முடித்தார்கள்.

இவ்வளவு சிக்கல்களைக் கடந்து வாக்குப்பதிவு சுமுகமாக நடந்து முடிந்தது. 60.79 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
முடிவுகள்?
எந்தக்குழப்பமும் இன்றி முடிவுகள் வந்தன.திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி 39,540 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வாக்கு விவரம்:

மொத்தம் 1,94,579
பதிவு 1,17,215
சுப்புலட்சுமி (திமுக) 64,436 (54.97%)
கிட்டுசாமி (அதிமுக) 24,896
இளஞ்செழியன் (மதிமுக) 20,403
இதுபற்றி வெற்றி பெற்ற சுப்புலட்சுமியிடம் கேட்டபோது, “இது கடினமான தேர்தலாக இருந்த போதிலும், 65 பக்க வாக்குப் புத்தகத்தில் 25-ம் பக்கத்தில் இருந்த உதயசூரியன் சின்னத்தை தேடிப் பார்த்து வாக்காளர்கள் முத்திரையிட்டதை அறிந்து வியந்து போனேன்” என்றார்.
இதே போல் அதிமுகவின் இரட்டை இலை, மதிமுகவின் குடை ஆகிய சின்னங்களையும் தலா இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேடி முத்திரையிட்டதைப் பார்க்கும் போது தமிழக வாக்காளர்களை யாரும் குழப்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *