June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக சட்டசபை தேர்தல் வரலாறு (2016)- ஜெயலலிதா, கருணாநிதி மரணம்

1 min read

Tamil Nadu Assembly Election History (2016)- Death of Jayalalithaa, Karunanidhi

19.4.2026
2016-ம் ஆண்டு மே 16-ந் தேதி நடந்த சட்டமன்றத்தேர்தல் தமிழகம் சந்தித்த 15-வது தேர்தலாகும்.
2014 நாடாளுமன்றத்தேர்தல் போலவே அதிமுக இதிலும்
தனித்துப்போட்டியிட்டது. ஒப்புக்கு 6 சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது. மனிதநேய ஜனநாயக கட்சி (2), குடியரசு கட்சி (1), சமத்துவ மக்கள் கட்சி (1), கொங்கு இளைஞர் பேரவை (1), முக்குலத்தோர் புலிப்படை (1), தமிழ் மாநில முஸ்லிம் லீக் (1) ஆகியவையே அந்தக்கட்சிகள். அவை இரட்டை இலைச்சின்னத்திலேயே போட்டியிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் அதிமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் சேர்ந்து இருந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயத்தொழிலாளர் கட்சி, சமூக சமத்துவப் படை
ஆகியவை திமுகவுடன் அணி சேர்ந்து போட்டியிட்டன.
இந்தத்தேர்தலின்போது, திமுக தலைவர் கருணாநிதிக்கு 92 வயதாகி இருந்தது. எனவே தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய அவர் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. எனவே, திமுக பொருளாளர் முக ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.

மக்கள் நலக்கூட்டணி

3-வது அணியாக ‘மக்கள் நலக்கூட்டணி’ அமைந்தது. இதில் தேமுதிக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ, விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவை
இடம் பெற்றன.
பாமக, ‘மாற்றம் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் அன்புமணியை முன்னிறுத்தி தனித்துப்போட்டியிட்டது.
சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் கண்டது.
திமுகவின் தேர்தல் பிரசாரத்தில், “நமக்கு நாமே” என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் சந்திப்புக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் ஒழிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிட்டியது. இருந்தும்,
நூலிழை வித்தியாசத்தில் திமுகவின் ஆட்சிக்கனவு கை நழுவியது. 74.81 சதவீத வாக்குகள் பதிவான இத்தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
திமுக 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன.
வாக்குப்பதிவு நாள் நெருங்கியநிலையில், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவாக்குறிச்சி தொகுதிகளுக்கு
5 மாதங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, தன் கணக்கை 136 ஆக உயர்த்தியது.
இரு அணிகளின் வாக்கு வித்தியாசம் 1.4 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலக்கூட்டணி, பாமக ஆகியவை ஒரு இடம் கூட பிடிக்க முடியவில்லை. பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி, 2014 நாடாளுமன்றத்தேர்தலில் திமுக, அதிமுகவை
தோற்கடித்து தர்மபுரியில் வென்று எம்பி பதவி வகித்த நிலையில், சட்டமன்றத்துக்கு பென்னாகரத்தில் போட்டியிட்டு தோற்றது மட்டுமின்றி, 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையில்
தோற்று 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டை பறிகொடுத்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கோவில்பட்டியில் போட்டியிடுவதாக முதலில் அறிவித்து இருந்தார். ஆனால் திடீரென்று தேர்தலில் போட்டியிடவில்லை என்று பின்வாங்கிக்கொண்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் தவிர வேறு எந்தக்கட்சிக்கும் இடம் இல்லை என்ற தீர்ப்பை மக்கள் அளித்தது, 2016 தேர்தலில் தான் என்பது
குறிப்பிடத்தக்கது.

4-வது முறையாக ஆட்சியைப்பிடித்த ஜெயலலிதா, 23-5-16 அன்று மீண்டும் முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.ஆனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 5-12-16 அன்று மரணம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு முதல்வராக பதவி வகித்து, ஜெயலலிதா மரணத்துக்குப்பின், 6-12-16 அன்று முதல்- அமைச்சராகப்பதவி ஏற்றார்.
ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருந்த கொஞ்ச நாளிலேயே
ஜெயலலிதாவின் தோழி சசிகலா முதல்வராக ஆசைப்பட்டு,
ஓ.பன்னீரசெல்வத்தை பதவி விலகவைத்து, சட்டமன்ற அதிமுக
தலைவராகவும் தேர்வு பெற்றார்.
ஆனால் உச்சநீதிமன்றத்தில்
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், பெங்களூரு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு சசிகலா சிறை செல்ல நேரிட்டது. எனவே, அவர் எடப்பாடி பழனிசாமியை
முதல்வராக்கி விட்டு சிறை சென்றார். எடப்பாடி பழனிசாமி 16-2-17 அன்று முதல்வராகப்பதவி ஏற்றார்.

2016 தேர்தல கண்ணோட்டம்

மொத்த வாக்குகள் 5,82,60,506
பதிவானவை 4,35,85,691 (74.81%)
அதிமுக 136 (1,78,06,490 (40.88%)

திமுக 89 (1,36,70,511 (31.39%)
காங் 8 (27,74,075 (6.47%)
மு. லீக் 1 (3,13,808 (0.73%)
புதிய தமிழகம், மநேம-0
(திமுக கூட்டணி 98 (1,71,75,374 (39.40%)
மக்கள் நலக்கூட்டணி 0 (26,21,297 (6.1%).

மோடியா லேடியா? ஜெயலலிதாவின் சவால்

2016 சட்டமன்றத்தேர்தலுக்கு முன், 2014-ல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக வென்று மோடி பிரதமர் ஆனபோதிலும், தமிழ்நாட்டில் அதிமுக தனித்து நின்று, மோடியா இந்த லேடியா (ஜெ) என்று சவால் விட்டு, 39-க்கு 37 இடங்களை வென்றது.
திமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. தேமுதிக, பாமக, பாஜக, மதிமுக சேர்ந்து மோடி பிம்பத்தைப்பயன்படுத்தி, 3-வது அணியாக நின்றதில், பாமக தர்மபுரியிலும், பாஜக கன்னியாகுமரியிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுரு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. 27-9-14ல் இந்த அதிரடித்தீர்ப்பை வழங்கிய நீதிபதி மைக்கேல் குன்கா, உடனடியாக ஜெயலலிதாவும், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சிறைக்குச் செல்ல உத்தரவிட்டார். இதன் காரணமாக
அன்றே ஜெயலலிதா பதவி விலக நேரிட்டது. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பதவியில் இருந்தும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த முறையும் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றார்.
சிறையில் இருந்த ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதன்பிறகு தன் மீதான தண்டனையை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதி குமாரசாமி இந்த வழக்கில் ஜெயலலிதா
உள்பட நால்வரையும் விடுவித்தார்.
இதையடுத்து, 23-5-15 அன்று ஜெயலலிதா மீண்டும் முதல்-
அமைச்சராகப்பதவி ஏற்றார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ஆர்கே நகர் எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்தார். காலியான அந்தத்
தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூன்) தேர்தல்
நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான திமுக போட்டியிடவில்லை. இந்திய கம்யூனிஸ்டு மட்டும் வேட்பாளரை நிறுத்தியது. தேர்தல் முடிவில் 1,50,722 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயலலிதா
வென்றார்.
ஜெயலலிதா 1,60,432
மகேந்திரன்(இந்திய கம்யூ) 9,710.

கருணாநதியின் இறுதி சாதனை

2016 தேர்தல் ஜெயலலிதாவுக்கு கடைசித்தேர்தலாக அமைந்தது போலவே, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கும் இறுதித் தேர்தலாக அமைந்து விட்டது.
2011 போலவே 2016-லும் அவர் திருவாரூரில் போட்டியிட்டு
தமிழ்நாட்டிலேயே யாரும் பெற்றிராத வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற்றார். வாக்கு விவரம்:
மொத்த வாக்குகள் 2,53,227
பதிவு 1,96,795 (77.71%)
கலைஞர் கருணாநிதி 1,21,473 (61.73%)
ஆர்.பன்னீர்செல்வம் (அதிமுக) 53,107 (26.99%)
(வாக்கு வித்தியாசம் 68,366).
இதே தேர்தலில் முதல்-அமைச்சரான ஜெயலலிதாவின் வாக்கு
வித்தியாசம் 39,545. (ஜெயலலிதா 97,218 சிம்லா முத்துச்சோழன் (திமுக) 57,673).
ஜெயலலிதா தொடர்ந்து 2வது முறையாக (2011,2016) ஆட்சியைப்பிடித்த சாதனையை நிகழ்த்தி மறைந்தார்.
கருணாநிதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற சாதனையை நிகழ்த்தி 2018 ஆகஸ்டு 7ல் மறைந்தார்.

(அடுத்து 2021 தேர்தல்).

-(கட்டுரைத்தொகுப்பு: மணிராஜ்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *