செவ்வாய் கிரகம்: நாசா அனுப்பிய விண்கலம் மூலம் முக்கிய கண்டுபிடிப்பு
1 min read
Mars: Major discovery by NASA spacecraft
24/4/2026
செவ்வாய் கிரகம் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிருந்ததா என்பது பற்றி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தை ஆராய 2012-ல் அனுப்பப்பட்டது.
இது கார் அளவிலான, அணுசக்தியால் இயங்கும் விண்கலமாகும். இது செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து, அங்குள்ள பாறைகளில் கரிம மூலக்கூறுகள் மற்றும் நீரின் தடயங்களை கண்டறிந்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்ந்ததற்கான புதிய ஆதாரமாக இதுவரை கண்டறியப்படாத மிகச் சிக்கலான 7 கரிம மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள பாறைகளில் உயிரினங்களின் அடிப்படையாகக் கருதப்படும் நைட்ரஜன் மற்றும் கந்தகச் சேர்மங்கள் இருப்பதை ஒரு சிறப்பு வேதியியல் பரிசோதனை வெளிப்படுத்தியுள்ளது. இது பூமியில் உள்ள ஆ.என்.ஏ. மற்றும் டி.என்.ஏ.க்கு முன்னோடியாக கருதப்படுகிறது.
இதனை விஞ்ஞானிகள் வியப்புடன் பார்வையிட்டு அடுத்தக்கட்ட ஆய்வை நோக்கி நகர்ந்துள்ளனர். இதன் மூலம் உயிர் வாழத் தேவையான வேதியியல் சூழல் அங்கு இருந்தது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது. எனினும், இவை ஒரு உயிரினத்தின் எச்சங்களா அல்லது வெறுமனே ஒரு வேதியியல் செயல்முறையின் விளைவா என்பதை விஞ்ஞானிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தில் உயிரினங்களைத் தேடும் முயற்சியில் ஒரு புரட்சிகரமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.