2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விளக்கங்கள் பெறலாம்
1 min read
Get explanations about the 2027 Census
26.4.2026
நாடு முழுவதும் தற்போது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணி நடந்து வருகிறது. இதில் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு தொடர்பான கேள்விகள் கேட் கப்படுகிறது.
இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், விளக்கங்களை அறிந்து கொள்ளவும் இந்தியப் பதிவாளர் ஜெனரல், சில வசதிகளை செய்துள்ளார். அதன்படி 1855 என்ற தேசிய கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களுக்கு நிவர்த்தி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் பொதுமக்களுக்காக ஒரு வாட்ஸ்அப் உரையாடல் வசதியையும் அறிமுகப்படுத்தினார். இது அனைத்து மாநிலங்களின் பிராந்திய மொழிகளில் அறிந்து கொள்ளும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
==
லஞ்சம் பணத்தை எலிகள் தின்றுவிட்டதாக கூறிய போலீசார்
நீதிபதிகள் அதிர்ச்சி
புதுடெல்லி,ஏப்.27-
பீகார் குழந்தைகள் நலத்துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதற்காக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை கோர்ட்டு அவரை விடுவித்த நிலையில், ஐகோர்ட்டு அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அந்த பெண் அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பர்திவாலா, விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது. இதில் அவரது தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதிகள். ஜாமீனும் வழங்கினர்.
அதேநேரம் இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லஞ்சப்பணத்தை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தபோது எலிகள் தின்று அழித்து விட்டதாக போலீசார் தெரிவித்ததாக கூறப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்த நீதிபதிகள் கடும் அதிர்ச்சி வெளியிட்டனர். இதை புறக்கணிக்க முடியாது எனக் கூறிய அவர்கள், அது குறித்து விசாரிக்கப்போம் என உறுதிபட தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், ‘எலிகள் மற்றும் பூச்சிகளால் ரூபாய் நோட்டுகள் அழிக்கப்பட்டது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படாததால், இவ்வகையான குற்றங்களில் மீட்கப்படும் இதுபோன்ற எத்தனை ரூபாய் நோட்டுகள் அழிக்கப்படுகின்றனவோ என எண்ணத் தோன்றுகிறது. இது மாநில அரசுக்கு ஒரு பெரும் வருவாய் இழப்பாகும்’ என வேதனை தெரிவித்தனர். பின்னர் இந்த நோட்டுகள் அழிக்கப்பட்டதற்காக அளிக்கப்பட்ட விளக்கமும் ஏற்கும்படி இல்லை எனக்கூறிய அவர்கள், அது குறித்து விசாரணை நடத்தப்படும் எனக்கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.