டி20 போட்டிக்கு தேர்வாகாததால் வீராங்கனை தற்கொலை
1 min read
Player commits suicide after not being selected for T20 tournament
1.5.2026
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர்குமார். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி (வயது 19). இவர் புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கதிர்காமத்தில் உள்ள துரைராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார்.
கிரிக்கெட்டின் மீது ஆர்வமுள்ள இவர் ஒரு அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். இவருக்கு கதிர்வேல் என்பவர் பயிற்சி யாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட டி20 போட்டிக்கான வீராங்கனைகள் பட்டியலில் ஏஞ்சல் கங்கவாணி இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதில் இருந்து அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் தனது பயிற்சியாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு அவர் ஏஞ்சல் கங்கவாணியை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. உடனே அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஏஞ்சல் கங்கவாணி மின் விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ஏஞ்சல் கங்க வாணி தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினர். அப்போது அவரது கைப்பட எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், ‘என் வாழ்க்கை இவ்வளவு நாள் தான் என்பது கடவுள் எழுதி வைத்தது. என் மரணத்திற்கு நான் தான் காரணம். வேறு யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. அம்மா. அப்பா மிஸ் யூ’ என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்.
அவரது செல்போனை போலீசார் சோதனை செய்ய முயன்றபோது. அது லாக் செய்யப்பட்டிருந்தது. அதனை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சோதனை நடத்த உள்ளனர்.
அவர் டி20 போட்டிக்கு தேர்வாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெற்றோர் தன்னுடன் இல்லையே என்ற வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.