பாபநாசம் ஆற்றில் பக்தர்கள் விட்ட துணிகளை அகற்றும் பணி
1 min read
The task of removing clothes left by devotees in the Papanasam River
14.5.2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள புகழ்பெற்ற பாபநாசம் பாபநாசநாதர் கோவில் முன்பு உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகார பூஜைகள் செய்து வருகின்றனர்.
அப்போது சில பக்தர்கள் பழைய துணிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை ஆற்றில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்,
பாபநாசம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவ்வாறு செய்வதால் தாமிரபரணி ஆற்றின் தூய்மை பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, ஆற்றில் தேங்கியிருந்த துணிகள் மற்றும் கழிவுகளை அகற்றி வருகின்றனர்.
மேலும், பக்தர்கள் பரிகார பொருட்கள் மற்றும் துணிகளை ஆற்றில் வீசாமல் குறிப்பிட்ட இடங்களில் ஒப்படைக்க வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தாமிரபரணி தண்ணீரை திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் கீழ் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இது போன்ற செயல்களால் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் உறுதித்தன்மை இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.