June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்மேற்கு பருவமழையை வரவேற்க காத்திருக்கும் இராமநதி அணை

1 min read

Ramanathi Dam awaits the arrival of the southwest monsoon

15.5.2026
தென்காசி மாவட்டம் கடையத்தில் அமைந்துள்ள இராமநதி அணையின் மராமத்து பணிகள் நிறைவடைந்து தென்மேற்கு பருவமழையை வரவேற்க ஆயத்த நிலையில் உள்ளது.

தென்காசி மாவட்டம் கடையத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இராமநதி அணையின் மராமத்து பணிகள் நிறைவடைந்து தென்மேற்கு பருவமழையை வரவேற்க ஆயத்த நிலையில் உள்ளது.

சுமார் 6000 ஏக்கர் விவசாய நிலங்களின் நீராதாரமாக விளங்கும் இராமநதி அணை 84 அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையை சுற்றியிருக்கும் 50க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களில் வாழும் பல்லாயிரம் விவசாய குடும்பங்கள் இந்த அணையை நம்பியே வாழ்கிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள சூழலில் விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது பண்படுத்தி வைகாசி மாதத்தில் தொடங்கும் சம்பா சாகுபடிக்காக ஆயத்தமாகி வரும் நிலையில் இராமநதி அணையின் மராமத்து பணிகள் நடைபெற்று வந்த அணையின் தற்போதைய நிலை குறித்து இராமநதி அணையின் உதவி பொறியாளரிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது,

இராமநதி அணையின் கரைகள் மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் பலப்படுத்தப்பட்டு மதகுகளின் ஷட்டர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மதகுகளில் ஏற்பட்டிருந்த மண்ணடைப்புகளும் சுத்தம் செய்யப்பட்டு தென்மேற்கு பருவமழையை வரவேற்க ஆயத்த நிலையில் இராமநதி அணை உள்ளது. அணையின் நீரிருப்பு அளவுகோல் (ஸ்கேல்), எச்சரிக்கை மணி, ஜெனரேட்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் செயல்படும் நிலையிலேயே உள்ளது.

மேலும், அணையின் மேலிருந்து கீழிறங்கும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி பக்கவாட்டுச் சுவர்கள் உயர்த்தப்பட்டு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், டி.என்.கே.எஸ். 95 இராமநதி வடகால் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் இராமகிருஷ்ணன் கூறுகையில், இராமநதி அணையின் பாசன குளங்களான பட்டறை கட்டி, மேலப்பத்து, வடபத்து தென்பத்து குளங்கள், குட்டிகுளம், அய்யம்பிள்ளை குளம், குறிப்பான்குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரும் கால்வாயை அகலப்படுத்தி இந்த குளங்களின் கரைகளை பலப்படுத்தி குளங்களை தூர்வாரி இந்த பகுதிகளில் உள்ள மதகுகளின் ஷட்டர்களை பழுது பார்த்து விவசாயிகளுக்கு உதவிட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
-ஜோசப், நிருபர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *