June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் நிமோனியா காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி

1 min read


4-year-old girl dies of pneumonia in Nellai

16.5.2026
நிமோனியா என்பது நுரையீரலை தாக்கும் ஒரு தீவிரமான தொற்று நோய். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் மூலம் இந்த நோய் பரவுகிறது. கிருமி தொற்றால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் வீக்கம் ஏற்பட்டு, அவற்றில் நீர் அல்லது சளி கோர்த்துக்கொள்ளும்.

இதனால் மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, இருமல் மற்றும் கடுமையான காய்ச்சல் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களை இந்த நோய் எளிதில் தாக்கும். இதேபோன்ற ஒரு நிமோனியா காய்ச்சலால் நெல்லையில் 4 வயது சிறுமி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ரசூல். இவருடைய மகள் ரிப்கா பாத்திமா (வயது 4). இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்தது. இதையடுத்து சிறுமியை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி ரிப்கா பாத்திமா இன்று பரிதாபமாக உயிரிழந்தாள்.

மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சுகாதார சீர்கேடு அதிகமாக நிலவி வருகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி கடுமையான காய்ச்சல் பரவி வருகிறது. இந்தச் சூழலில் காய்ச்சல் பாதித்து சிறுமி பலியான சம்பவம் மேலப்பாளையம் மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே காய்ச்சல் பரவல் குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மேலப்பாளையத்தில் முகாமிட்டு தீவிர ஆய்வு செய்தனர். சிறுமியின் இறப்பு குறித்து நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் முரளி கூறுகையில், உயிரிழந்த சிறுமிக்கு நுரையீரலில் தீவிர பாதிப்பு இருந்தது. அதனை நிமோனியா காய்ச்சல் என்று மருத்துவத்துறையில் குறிப்பிடுவோம். சிறுமி இறந்ததை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் பலருக்கும் உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் செய்தோம். ஆனால், பாதிக்கப்பட்ட அந்த சிறுமியைத் தவிர வேறு எந்தக் குழந்தைக்கும் இதுபோல நிமோனியா பாதிப்பு இல்லை என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *