June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய அண்ணாமலை கோரிக்கை

1 min read

Annamalai demands a complete waiver of farmers’ crop loans.

19.6.2026
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ரூ. 75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த 1970ம் ஆண்டு, இதே நாளில் தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசை தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.

உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம்.

இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *