இந்தியாவுக்கு 3 கோடி பேரல் கச்சா எண்ணெய் வழங்கும் ஐக்கிய அரபு அமீரகம்
1 min read
UAE to supply 30 million barrels of crude oil to India
16.5.2026
பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு 6 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அவர் நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு செல்கிறார்.
இந்த பயணத்துக்கு முன்பு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேற்று சென்றார். அமீரகத்தில் சுமார் 45 லட்சம் இந்தியர்கள் வசித்து வருவதால் இந்த பயணம் இரு நாட்டு உறவுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
அபுதாபி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அமீரக அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் நேரில் வரவேற்றார். அப்போது முப்படையினரின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
சுமார் 24 மணி நேர அமீரக பயணத்தில் முக்கியமாக அமீரக அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தலைவர்களும் எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, பொருளாதார கூட்டாண்மை மற்றும் பிரதேச நிலவரம் ஆகியவை குறித்து பேசினர்.
மேலும் இந்தியா-அமீரகம் இடையேயான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது, நேரடி வெளிநாட்டு முதலீடு களை பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட கூட்டு பொருளா தார ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகரித்துள்ள பலன்கள் குறித்து பேசப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சனையை தீர்ப்பது குறித்து முக்கியமாக பேச்சுவார்த்தை நடந்தது.
தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே ராணுவம், எரிசக்தி பாதுகாப்பு, கப்பல் பழுது நீக்கும் தளம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
குறிப்பாக இந்தியாவின் பெட்ரோலிய கையிருப்பை உயர்த்தவும், அதில் அமீரகத்தின் பங்களிப்பை 3 கோடி பீப்பாயாக அதிகரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும் எரிவாயு வினியோகம் தொடர்பாக தனியாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அமீரகம் 500 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.47,500 கோடி முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தமும் அடங்கும்.