June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

’திமுக-அதிமுக கூட்டணிக்கு முயற்சிக்கவில்லை’ – ரஜினிகாந்த் பேட்டி

1 min read

‘I am not trying for a DMK-AIADMK alliance’ – Rajinikanth interview

17.5.2026
சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். திமுக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ரஜினிகாந்த்தான் காரணம் என தகவல் பரவிய நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதற்கு நான் விடை கொடுக்காவிட்டால் அது உண்மையாகிவிடும். சமீபத்தில் கூட நான் பெங்களூரு சென்று வந்தேன் அப்போது இது தொடர்பான விமர்சனங்களுக்கு பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளிக்க நினைத்தேன். ஆனால் பத்திரிகையாளர்கள் அங்கு வராததால் நான் விளக்கம் அளிக்க முடியவில்லை. இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தை இப்போது அளிக்கிறேன்.
தேர்தல் முடிவு வந்தவுடன் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தேன். அது பெரும் விமர்சனம் ஆகிவிட்டது. மு.க. ஸ்டாலின் எனக்கு 40 ஆண்டு கால நண்பர் எங்களது நட்பு கொள்கைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் இருந்தாலும் கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்தது சங்கடமாக இருந்தது. அதற்காக ஒரு நண்பன் என்ற முறையில் நட்பு அடிப்படையில் அவரை சென்று சந்தித்தேன். உடனே விஜய் முதல்-அமைச்சராக கூடாது. அதை தடுக்க தான் ரஜினி மு.க. ஸ்டாலினை சந்தித்தார். வேறு இரண்டு பெரிய கட்சிகளை இணைக்கவும் திட்டமிடுகிறார் என்றெல்லாம் பரப்பி விட்டார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் இப்படி எல்லாம் பேச முடியுமா அப்படி பேசும் அளவுக்கு தரம் கெட்ட ஆள் நான் கிடையாது. அதை தற்போது தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
அப்புறம் விமான நிலையத்தில் விஜய் பற்றி கேட்ட கேள்விக்கு அவருக்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்றும் விமர்சிக்கிறார்கள். விஜய் முதல்-அமைச்சரான உடனே எனது எக்ஸ்தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
2016-ம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் என்று நான் சொன்னது முதல் விமான நிலையத்திற்கு சென்றால் மீடியா இருக்கிறார்களா என்று கேட்டு வைத்துக் கொள்வேன். அப்படித்தான் இந்த முறையும் கேட்டு சென்றேன். ஆனால் மீடியா யாரும் வரவில்லை என்று சொன்னார்கள். அந்த சமயம் செல்போனில் வீடியோ எடுத்த படி ஒருவர் என்னிடம் வந்து, விஜய் முதல்-அமைச்சர் ஆகிவிட்டாரே என்று கேட்கிறார். எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது அவரைப் பார்த்தால் மீடியா மாதிரி தெரியவில்லை நான் சிரித்தபடியே கடந்து விட்டேன். உடனே விஜய்க்கு நான் வாழ்த்து சொல்லவில்லை என்று விமர்சிக்கிறார்கள்.

விஜய் மீது எனக்கு பொறாமை என்றும் பேசுகிறார்கள். நான் அரசியலில் இல்லை, அரசியலில் இருந்து விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அரசியலில் நான் இல்லாத போது விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும். ஒருவேளை கமல்ஹாசன் முதல்-அமைச்சராகி இருந்தால் கூட பொறாமைப்பட்டிருப்பேனோ தெரியவில்லை. அப்போது கூட எனக்கு பொறாமை வந்திருக்காது. கிடைப்பது கிடைக்காமல் இருக்காது கிடைக்காமல் இருப்பது கிடைக்காது. எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன் என்னுடன் விஜய் ஒப்பிடுவது சரியாகாது அதேபோல் அவருடன் என்னை ஒப்பிடுவதும் சரியாக இருக்காது.
சிறிய வயதில் இருந்து அவரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் முதல்-அமைச்சராவதில் எனக்கு ஏன் பொறாமை. அரசியலில் சிறிய வயதில் அதாவது 52 வயதில் எம்ஜிஆர், என்டிஆர் போல சாதனை படைத்திருக்கிறார். மத்திய மாநில அரசுகளை தாண்டி தனி ஆளாக சினிமாவில் இருந்து வந்த ஒரு நபர் அரசியலில் ஜெயித்திருக்கிறார். இதில் எனக்கு என்ன பொறாமை இருக்கப் போகிறது. இது சந்தோஷம் கலந்த ஆச்சரியம் தான். எனவே எனக்கு எந்த பொறாமையும் இல்லை, நிறைய எதிர்பார்ப்புகள் தான் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்து மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று ஏற்கனவே ஒரு தெளிவான அறிக்கையின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறேன். அது தெரிந்த பிறகும் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று பேசுபவர்களுக்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. சினிமா வேறு அரசியல் வேறு. சினிமாவில் உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட ஓய்வெடுத்து நடிக்கலாம் ஆனால் அரசியல் தளம் வேறு. அது அவ்வளவு எளிது அல்ல.
ஏற்கனவே சினிமா தரப்பில் இருந்து இயக்குனர் சங்க தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்று விஜய்யை சந்தித்து கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். சமீபத்தில் கமல்ஹாசனும் சென்று வந்துள்ளார் எனவே வெறும் சம்பிரதாயத்துக்கு நானும் சென்று சந்திப்பது நன்றாக இருக்காது.

விஜய் மீது எதிர்பார்ப்பு ஜாஸ்தியாக இருக்கிறது. ஆனால் அவரை ஒரு இரண்டு வருடங்கள் விட்டு விட வேண்டும். அவரது தொண்டர்களும் ரசிகர்களும் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும் வேண்டும். என்ன தவறு செய்தாலும் அது விஜய்க்கு தான் பாதிப்பு என்பதை உணர வேண்டும்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாற்றம் தேவை என்று மக்கள் நினைத்து இருக்கிறார்கள். விஜய்யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நான் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பேன்.
இதுவரை முதல்-அமைச்சர் பதவியேற்பு விழாக்களில் நான் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது அவர் விருப்பப்பட்டு அழைத்ததின் பெயரில் தான் நான் அந்த விழாவுக்கு சென்றேன்’
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *