செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க தமிழக அரசிடம் அமலாக்கத்துறை அனுமதி கேட்கிறது
1 min read
Enforcement Directorate seeks permission from Tamil Nadu government to question Senthil Balaji
19/5/2026
அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அதுமட்டுமில்லால், அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட சிலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, பல மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காரணத்தினால், செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல தமிழக அரசின் அனுமதி தேவைப்பட்டது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சியமைந்த நிலையில், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்கக்கோரி, தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக தேவையான ஆதாரங்கள், ரகசிய தகவல்கள் மற்றும் புகார் ஆவணங்களை தமிழக தலைமை செயலருக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.