June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

நாளை வானில் தோன்றும் புளூ மைக்ரோ மூன்

1 min read

Blue Micro Moon to appear in the sky tomorrow

30.5.2026

விண்ணிலும், மண்ணிலும் அரிய அதிசயங்களை ரசிக்கும் ஆர்வம் கொண்ட உலக மக்களுக்கு இந்த வார இறுதியில் ஒரு பிரம்மாண்ட வான்விருந்து காத்திருக்கிறது. நாளை இரவு, வானில் ‘புளூ மைக்ரோ மூன்’ எனப்படும் மிகவும் அரிய விசித்திர நிலவு தோன்றவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

சுமார் 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அதிசய நிகழ்வை தங்களது கண்களால் கண்டு ரசிக்க உலகெங்கிலும் உள்ள வானியலாளர்களும், பொதுமக்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக ஒரு ஆங்கில மாதத்தில் ஒரு முழு நிலவு (பவுர்ணமி) தோன்றுவதுதான் வழக்கம். ஆனால், அரிதாக 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வருவதுண்டு. அப்படி வரும் இரண்டாவது பவுர்ணமி நிலவை ‘புளு முன்’ (நீல நிலவு) என்று அழைப்பார்கள். மே மாதத்தின் தொடக்கத்திலேயே (மே 1) ஒரு பவுர்ணமி தோன்றிவிட்ட நிலையில், இந்த மாதத்தின் இறுதி நாளான நாளை இரண்டாவது பவுர்ணமி நிலவு தோன்றுகிறது.

ஆனால், இந்த முறை தோன்றும் நிலவு வெறும் ‘புளூ மூன்’ மட்டுமல்ல, அது ஒரு ‘மைக்ரோ மூன்’ ஆகும். நிலவானது பூமியை வலம் வரும் தனது நீள்வட்டப் பாதையில், பூமிக்கு மிகத் தொலைவில் உள்ள புள்ளியை எட்டும்போது இந்த பவுர்ணமி நிகழ்கிறது. பூமியிலிருந்து சுமார் 4 லட்சத்து 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு நிலவு தள்ளிச்செல்வதால், வழக்கமான பவுர்ணமி நிலவை விட இந்த நிலவு அளவிலும், தோற்றத்திலும் 14 சதவீதம் சிறியதாகவும், அதன் பிரகாசம் 30 சதவீதம் குறைவாகவும் காட்சியளிக்கும். இதனால்தான் இதற்கு ‘புளு மைக்ரோ மூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ‘புளூ மூன்’ மற்றும் ‘மைக்ரோ மூன்’ ஆகிய இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக இணைவது விண்வெளி வரலாற்றில் மிகமிக அரிதான ஒன்றாகும். இந்த அரிய நிகழ்வை நாம் தவறவிட்டால், மீண்டும் இப்படி ஒரு குட்டி நிலவை வான்பரப்பில் காண்பதற்கு இன்னும் 27 ஆண்டுகள். அதாவது 2053-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு இந்த அரிய நிகழ்வை 1999-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி காணமுடிந்தது. வரும் ஞாயிறன்று மேகமூட்டம் இல்லாத பட்சத்தில், இந்த வான்விந்தையை வெறும் கண்களாலேயே தெளிவாகக் காணலாம் என்பதால் உலகமே ஆவலில் உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *