குற்றாலம்: பெண்ணை சீரழித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
1 min read
Courtallam: Man who raped and murdered woman gets life sentence
3/6/2026
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே உள்ள நெடுவயல் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு செல்போன் மூலம் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
செல்போனில் தொடர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஒருநாள் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த அந்த நபர் அந்த பெண்ணிடம் தான் குற்றாலம் வருவதாகவும் அந்தப் பெண்ணை கடந்த 15.02.2022 அன்று குற்றாலத்திற்கு வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி அந்த பெண் கடந்த 15.02.2022 அன்று தனது செல்போன் நண்பரை காண குற்றாலம் வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் குற்றாலம் பஸ் நிலையத்தில் சந்தித்த நிலையில் குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். அதன்பின் அந்த பெண் இனி நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழலாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த நபர் சம்மதிக்கவில்லை இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் அந்தப் பெண்ணை அடித்து கீழே தள்ளி உள்ளார். இதனால் மயக்க நிலையில் கிடந்த அந்த பெண் கூச்சல் போட்டு விடக்கூடாது என்பதால் பெண்ணின் வாயில் அவள் அணிந்திருந்த ஜட்டியை எடுத்து திணித்துள்ளார்.
இதனால் அவள் சத்தம் போடமுடியாத நிலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.இதைப்பார்த்ததும் அந்த பெண் இறந்துவிட்டதாக கருதி அவள் அணிந்திருந்த தாலி, கொலுசு மற்றும் அவள் பர்சில் வைத்திருந்த ரூபாய் 700 ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்நிலையில் அன்று மாலையில் அரசு விருந்தினர் மாளிகையில் வேலை செய்யும் வாட்ச்மேன் சண்முகவேலு என்பவரது மகன் மதியழகன் விருந்தினர் மாளிகைக்கு பின்புறம் ஒரு பெண் மயங்கி நிலையில் கிடப்பதாக குற்றாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அந்தப் பெண் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிக்க ஸ்டீபன் ஜி ஆர் ஜோஸ் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த தனிப்படையினர்
நடத்திய விசாரணையில் அந்த பெண் செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் நெடுவயல் பகுதியைச் சார்ந்த ஆறுமுகச்சாமி என்பவரின் மனைவி செல்ல பொண்ணு என்பதும் அவரது செல் போன் நண்பர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ராஜவேல் என்பவரது மகன் சந்தோஷ் குமார் என்ற அழகு சுந்தரம் என்பதும் தெரிய வந்தது.
உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த நபர் செல்போன் மூலம் செல்ல பொண்ணுக்கும் தனக்கும் நட்பு ஏற்பட்டதாகவும் அவரை சந்திக்க குற்றாலம் வந்ததாகவும் அங்கு குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு பின்புறம் இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது அவரை கீழே தள்ளியதில் தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்ததாகவும் அந்த அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து காஞ்சிபுரம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் கவிதா ஆஜராகி வாதாடினார் . விசாரணை முடிவில் தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பி ராஜவேல் குற்றவாளி சந்தோஷ் குமார் என்ற அழகு சுந்தரத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.