டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல் அமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
1 min read
Chief Minister Vijay receives an enthusiastic welcome at Tamil Nadu House in Delhi.
10.6.2026
தமிழக முதல் அமைச்சர் விஜய் கடந்த 27ஆம் தேதி டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார். முதல் அமைச்சரான பிறகு முதல் முறையாக டெல்லி சென்றதால், தனது பயணத்தின் போது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி, சோனியா காந்தி என யாரையும் சந்திக்காமல் விஜய் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில், நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல் அமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி சென்ற விஜய்க்கு தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர். ஜெயா உள்ளிட்ட அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காவல்துறையினரின் மரியாதையையும் முதல் அமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல் அமைச்சர் விஜய், மாநிலத்தின் வளர்ச்சி, நிதி விவகாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இரவு டெல்லியில் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி தனது இல்லத்தில் உணவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் தனது டெல்லி பயணத்தில் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை டெல்லி வந்தபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. ஆனால், உள்துறை அமைச்சர் அலுவலகம் தரப்பில் விஜய்க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.