June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

மனைவி, மகனை கொன்றுவிட்டு துணிக்கடை உரிமையாளர் தற்கொலை

1 min read

Textile shop owner commits suicide after killing wife and son

10.6.2026
கர்நாடக மாநிலம் மண்டியா டவுன் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் அந்தப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதியின் மகன் சந்தோஷ். இவர் தந்தைக்கு உதவியாக துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். சந்தோசுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு சந்தோஷ் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை சந்தோசின் மனைவி எழுந்து பார்த்தார். அப்போது சந்தோஷ் இல்லை. அவர் கடைக்கு சென்று விட்டதாக நினைத்து, சமையல் அறைக்கு சென்று சமையல் வேலைகளை கவனித்தார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் மாமியார் ஜோதி அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அவரை எழுப்புவதற்காக அவர் ஜோதியின் அறைக்கு சென்றார். அப்போது அங்கு ஜோதியும், கணவர் சந்தோசும் படுக்கையில் பிணமாக கிடந்தனர். ஆனால் மாமனார் பிரபாகர் அங்கு இல்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.
இதனை கேட்டு அக்கம்பக் கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே துணிக்கடையில் பிரபாகர் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், பிரபாகர் தனது மனைவி மற்றும் மகனை கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அதாவது அதிகாலை 3.30 மணி அளவில் மனைவி ஜோதியின் கழுத்தை பிரபாகர் நெரித்துள்ளார். சத்தம் கேட்டு சந்தோஷ் வந்துள்ளார்.
அப்போது 2 பேரின் கழுத்தையும் நெரித்து பிரபாகர் கொன்றுவிட்டு துணிக்கடைக்கு சென்ற தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பிரபாகரின் மருமகள் வீட்டின் மற்றொரு அறையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். இதனால் அவர் எழுந்து வரவில்லை. இதன்காரணமாக அவர் உயிர் தப்பியதும் தெரியவந்தது.
மேலும் அவரது இந்த முடிவுக்கான காரணம் என்ன? என போலீசார் விசாரித்தனர். அப்போது பிரபாகர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில், துணிக்கடை தொழில் முடங்கியதாலும், கடன் சுமை அதிகரித்ததாலும் மனைவி, மகனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். கடன் சுமை, தனியார் நிதி நிறுவனங்களின் தொல்லை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் பிரபாகர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு பிரபாகர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *