தென்காசி மைய நூலகம் செல்லும் வழியை அடைத்த சமூக விரோதிகள்- கலெக்டர் நடவடிக்கை
1 min read
Anti-social elements block the path to the Tenkasi Central Library – Collector takes action
11.6.2026
தென்காசி மாவட்டம் தென்காசியில் இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகத்தில் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆண், பெண் பட்டதாரிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்து நூலகத்தில் படித்து பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் சமூக விரோதிகள் அந்த நூலகத்திற்கு செல்லும் பாதையினை அடிக்கடி அடைத்து வைத்து பெரும் இடையூறு செய்து வருகிறார்கள்.
இதுபற்றி மாணவர்கள் மற்றும் நூலகத்திற்கு வருகை பட்டதாரிகள் சமூக ஆர்வலர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்ட மைய நூலகம் இ சி ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிழக்கு ஓரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நூலகத்தில் 95,000 நூல்கள் 12 ஆயிரம் உறுப்பினர்கள் 280 புரவலர்களுடன் ,போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் மூலம் இதுவரை 400ம் மேற்பட்ட பட்டதாரிகள் அரசு பணி பெறுவதற்கு தென்காசி நூலகம் காரணமாக இன்றளவும் இருந்து வருகின்றது. தற்போதும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் ஆண் பெண் பட்டதாரிகள் 500-ம் மேற்பட்டோர் , நூலகத்தில் பெயர் பதிவு செய்து, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயின்று வருகிறார்கள்.
அவர்களுக்கு இலவச பயிற்சி ,இலவச மெட்டீரியல்ஸ், இலவச மாதிரி தேர்வும் வழங்கப்பட்டு நூலகம் இன்றும் வழிகாட்டியாக உள்ளது.பள்ளி மாணவ செல்வங்களுக்கு என்எம்எம்ஸ் ஸ்காலர்ஷிப்க்கு மாவட்ட அளவில் இலவசமாக பயிற்சி, மாதிரி தேர்வு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு உதவித்தொகை பெறுவதற்கு தென்காசி நூலகமும் காரணமாக இருந்து வருகிறது.
மேலும் நூலக வார விழா,உலக புத்தக தின விழா, தமிழறிஞர்கள் பிறந்த நாள் விழா,திருவள்ளுவர் விழா,நூல் அறிமுக விழா, இலக்கிய விழா,விழிப்புணர்வு முகாம்,பள்ளி மாணவ மாணவியர்க்கு போட்டிகள் என அனைத்து வயதினரும் வாசகர்களாக, தென்காசி நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்ட மைய நூலகத்திற்கு மெயின் ரோடு வழியாக பள்ளி நுழைவு வழியாக தெற்கு காம்பவுண்டு சுவரினை ஒட்டி நடைபாதை 10 அடி பயன்படுத்தி கொள்ள அப்போதைய ஆட்சித்தலைவர் ஆகாஷ் அனுமதி வழங்கினார். இதனை முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் ஏற்று கொண்டனர்.தற்போது வரை இவ்வழியாக எவ்வித இடையூறும் இன்றி நூலக வாசகர்கள் ஆண் பெண் பட்டதாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சில சமூக விரோதிகள் நூலகத்திற்கு
இதுவரை பயன்படுத்தி வந்த வழியினை பூட்டு போட்டு பூட்டி தடை ஏற்படுத்தியுள்ளனர்
இதனால் தென்காசி மாவட்ட மைய நூலகத்திற்கு வரும் பெண்கள் போட்டி தேர்விற்கு இரவு வரை பயின்று வரும் பட்டதாரி இளைஞர் இளைஞிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் நூலகம் செல்வதற்கு ஏற்கனவே இதுவரை நடைமுறையில் உள்ள வழியினை பயன்படுத்த அனுமதி வழங்கிட மாணவர்கள் சார்பில் வேண்டுகிறோம். என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவின் நகலினை தமிழக முதல்வர், மாவட்ட பொறுப்பு அமைச்சர்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆகியோருக்கும் அனுப்பி உள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தென்காசி மாவட்ட மைய நூலகத்திற்கு செல்லும் பாதையினை உடனடியாக திறந்து விடுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி உடனடியாக பாதை திறந்து விடப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள், பட்டதாரிகள், நூலகத்தை பயன்படுத்தும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.