June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

மாணவர்களுக்கு விற்பனை: ரூ.5 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்- 3 பேர் கைது

1 min read

Narcotic pills worth Rs.5 lakh intended for sale to students seized; 3 arrested.

12/6/2026
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகமாகி வருவதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்தின் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், கொக்குடையான்பட்டியைச் சேர்ந்த திலீப்குமார் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கீழச்செம்பட்டியைச் சேர்ந்த மூவேந்திரன் என்பவரிடமிருந்து போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்பேரில், மூவேந்திரனிடம் போதை மாத்திரை வாங்குவது போல வரவைத்த போலீசார் அவரை உசிலம்பட்டி அருகே தினா விலக்கு பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 1,800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது மூவேந்திரனிடம் போதை மாத்திரை வாங்கிக் கொண்டிருந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்ற பர்மா என்பவரையும் கைது செய்த தனிப்பிரிவு போலீசார் மூவரையும் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த 3 பேரிடமிருந்து 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா மற்றும் இரு செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கீழச்செம்பட்டியைச் சேர்ந்த மூவேந்திரன் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி திலீப்குமார், துரைப்பாண்டி மூலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் போதை மாத்திரைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் குறித்தும் உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *