தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்; அமைச்சர் கீர்த்தனா நடவடிக்கை
1 min read
Shipbuilding yard in Thoothukudi; Minister Keerthana takes action.
12.6.2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதை உறுதி செய்யும் விதமாக, தென்கொரியாவின் ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை அமைச்சர் கீர்த்தனா நேர்மறையாக முன்னெடுத்துள்ளார்.
தமிழகத்தில் தவெக ஆட்சியமைந்த பிறகு, தொழில்துறை அமைச்சராக 29 வயதேயான இளம்பெண் கீர்த்தனா பொறுப்பேற்றுக் கொண்டார். மிக இளம் வயதில் அமைச்சரான இவர் எவ்வாறு செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் பொதுமக்களிடையே காணப்பட்டது.
இந்த சூழலில், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்த தென்கொரிய நிறுவனத்திற்கு நேரில் சென்றார். இந்த நிறுவனம் முந்தைய திமுக ஆட்சியில், முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. முதலீட்டை மீண்டும் ஒருமுறை உறுதி செய்வதே அமைச்சர் கீர்த்தனாவின் நோக்கம்.
அந்த வகையில் உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமாக அறியப்படும் ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் கீர்த்தனா. தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், உங்கள் தொழில் முதலீட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அந்த நிறுவனத்துக்கு உறுதி அளித்தார்.
இதனால் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படுவது உறுதி ஆகியுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை அண்மையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.