June 24, 2026

Seithi Saral

Tamil News Channel

பொட்டல்புதூரில் கனிமவள கனரக வாகனங்களை சிறைப் பிடித்த பொதுமக்கள்

1 min read

Public detain heavy vehicles transporting minerals in Pottalputhur

24.6.2026
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் மக்களுக்கு பெறும் அச்சுறுத்தலாக விளங்கும் கேரளாவிற்கு கனிமவளங்களை அள்ளிச் செல்லும் கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறைப் பிடித்து மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், பாப்பாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கனிமவள குவாரிகளால் அப்பகுதி மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கனிம வளங்களை அள்ளிச் செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் அனைத்தும் மக்கள் பயணிக்க முடியாத சாலையாக குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அதிவேகத்தில் செல்லும் இந்த வாகனங்களால் பல நேரங்களில் விபத்துகள் நிகழ்ந்து வருகிறது.

இந்த கனரக வாகனங்களால் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வகையான கனரக வாகனங்களையும் கனிமவள குவாரிகளையும் கட்டுப்படுத்த இப்பகுதி மக்கள் பலமுறை பலவித போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட ஆட்சியர் முதல் அமைச்சர்கள் வரை மனுக்கள் அளித்தும் எந்தப் பயனும் இல்லை.

இவ்வகை கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டிருந்தும் தங்களுக்கு சாதகமாக செயல்படும் காவல்துறை, கனிமவளத் துறை மற்றும் சுங்கச் சாவடி அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு அனைத்து விதிகளையும் அரசின் உத்தரவுகளையும் மீறி கனிமவள குவாரிகளின் முதலாளிகள் கனிமவளங்களை அனுமதிக்கப் பட்ட அளவைவிட அதிகமாக கேரளாவிற்கு அள்ளிச் செல்கின்றனர் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்கு பின் சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் கேரளா எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனைச் சாவடியிலும் கனிமவள குவாரிகளிலும் அதிரடி சோதனை நடத்திய தமிழக கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு சட்ட விரோதமான முறையில் செயல்படும் 18 கனிமவள குவாரிகளை செயல்பட தடை செய்து உத்தரவிட்டிருந்தார். தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவும் சமீபத்தில் புளியரை சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை நடத்தினார்.

சமீபத்தில் கூட தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் குற்றால சீசன் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையும் கனரக வாகனங்களை இயக்க நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும், கனிம வளங்களை அள்ளிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. எனவே, விரக்தி அடைந்த கடையம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், இரவணசமுத்திரம், முதலியார்பட்டி, மாலிக் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொட்டல்புதூர் பகுதியில் நேற்று (23-06-2026) இரவு 9 மணியளவில் கனிமவளங்களை அள்ளிச் செல்லும் கனரக வாகனங்களை சிறைப் பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பொட்டல்புதூர் பகுதிக்கு விரைந்து வந்த ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், ஆழ்வார்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா, கடையம் காவல் துணை ஆய்வாளர் மாடசாமி மற்றும் காவலர்கள் விரைந்து வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர்.

டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் வாகனங்களில் கனிம வளங்கள் அள்ளி செல்வதை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் சிறைப் பிடித்த வாகனங்களை விட மாட்டோம் என பொதுமக்கள் கூறினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி நடைமுறையில் உள்ள நேரக் கட்டுப்பாட்டின் பிரகாரம் மட்டுமே கனிமவளங்களை அள்ளிச் செல்லும் கனரக வாகனங்களை செல்ல அனுமதிப்போமென டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் உறுதியளித்ததின் பேரில் இரவு 12 மணிக்கு போராட்டம் நடத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

போராட்டத்தை முன் நின்று நடத்திய ஒன்றிய குழு உறுப்பினர் மணிகண்டன், ஐயுஎம்எல் நிர்வாகி கட்டி அப்துல் காதர், தமுமுக அபுபக்கர் சித்திக், யாகூப், நாகூர் மீரான், முகம்மது கனி, மீரான் மைதீன் உள்ளிட்டோர் கூறுகையில், தொடர்ந்து அரசு கனிம வளங்களை அள்ளிச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை இப்பகுதியில் முன்னெடுப்போம் என அறிவித்தனர்.இந்தப் போராட்டத்தால் இப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *