தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகியது
1 min read
MDMK withdrew from the DMK alliance.
27.6.2026
தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது. த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ச்சியாக தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிட்டது.
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதுவும் அவர்களுக்கு தி.மு.க.வின் உதயசூரியன் சின்னமே ஒதுக்கப்பட்டது. இது ம.தி.மு.க. தொண்டர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது.
தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. 4 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க. வேட்பாளர்கள் கடையநல்லூர், சீர்காழி ஆகிய 2 தொகுதிகளில் வெற்றிபெற்றனர்.
சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் விஜய், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. அணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. அரசுக்கு ஆதரவை தெரிவித்தன.
இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையிலும் இடம் பெற்றன. அதே நேரம் ம.தி.மு.க.வும், த.வெ.க.வுடன் நெருங்கி வந்தது. ஆனால் ம.தி.மு.க.வை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், நேரடியாக ஆதரவு தரமுடியவில்லை.
தேர்தலின்போது தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பை வைகோவும் வெளிப்படுத்தினார். இதற்கிடையே, முதல்-அமைச்சர் விஜய்யை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினார். எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்தநிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ மற்றும் 17 உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன் (கடையநல்லூர்), செந்தில் செல்வன் (சீர்காழி) ஆகியோர் அழைக்கப்பட் டனர்.
இதில் கடையநல்லூர் ராஜேந்திரன் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டார். செந்தில் செல்வன் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. மேலும் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதை அவர் விரும்பவில்லை என்றும், இதனால் அவர் இந்த கூட்டத்தை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர் தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அவர் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், இன்று சென்னை அண்ணாநகரில் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றநிலையில், இந்த கூட்டத்தில் செந்தில் செல்வன் மட்டுமல்லாது, ராஜேந்திரனும் கலந்துகொள்ளவில்லை. 2 பேருமே கலந்துகொள்ளாதது கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவை அதிர்ச்சி அடையச் செய்தது.
இதனிடையே நேற்று ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறி த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைப்பது, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், தி.மு.க. கூட்டணி வேண்டாம் என ஒருமனதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று ம.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் த.வெ.க.வுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் த.வெ.க. அரசுக்கு வாழ்த்து தெரிவித்தும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.