June 29, 2026

Seithi Saral

Tamil News Channel

4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டமன்ற செயலர் ஐகோர்ட்டில் பதில் மனு

1 min read

Legislative Assembly Secretary files counter-affidavit in High Court regarding the disqualification case of four AIADMK MLAs.

29.6.2026
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மே 13-ந்தேதி சட்டசபையில் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் 25 பேர் , கட்சியின் கொறடா உத்தரவை மீறி த.வெ.க., அரசுக்கு ஆதரவாக வாக்கு அளித்தனர். இதையடுத்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம், அ.தி.மு.க., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் குமரவேல் பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். உடனடியாக த.வெ.க.வில் சேர்ந்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க., கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு நிலுவையில் உள்ள நிலையில் இந்த 4 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். இந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதிக்கவேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டசபை செயலாளர் சாந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க., எம்.எல்.ஏக்களாக இருந்த 4 பேரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதால், அந்த 4 பேர் மீதான தகுதி நீக்க நடவடிக்கை செல்லாததாகி விடும் என்று கூறுவது தவறு. ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால், அவர்கள் தகுதி நீக்க நடவடிக்கை இருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள். 4 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரும் மனுவை சபாநாயகர் தொடர்ந்து விசாரிப்பார். அந்த விசாரணை முடிந்து இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னரே, அந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட முடியும். தகுதி நீக்கம் செய்ய கோரும் மனு மீது முடிவு எடுத்த பின்னரே, ராஜினாமா கடிதங்களை ஏற்கவேண்டும் என்று எந்த விதிகளும் கூறவில்லை. தகுதி நீக்க செய்ய கோரும் மனுவை குறித்து காலத்துக்குள் சபாநாயகர் விசாரித்து முடிப்பார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *