வீரவநல்லூர்: வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியருக்கு சாகும்வரை சிறை
1 min read
Sexual harassment of student in classroom: Government school teacher sentenced to life imprisonment
30/6/2026
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் என்ற நடேசன் (வயது 63). இவர், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கைத்தறி மற்றும் நெசவு பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு 9 வயது மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சேரன்மாதேவி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சிதம்பரத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றம் சாட்டப்பட்ட சிதம்பரத்துக்கு சாகும்வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.