நீதிபதிகளுக்கு உதவியாளர்களாக நியமனம் செய்ததை ஐகோர்ட்டு ரத்து செய்தது
1 min read
The High Court quashed the appointments made to the post of judicial assistants.
1.7.2026
‘திறன் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களும், நீதிபதிகளுக்கு உதவியாளர்களாக நியமிக்கப்பட்டது விதிமீறல்’ என, கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம், 17 பேரின் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளின் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப, 2023ம் ஆண்டு ஜூன் 7ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின், சென்னை உயர் நீதிமன்றத்தில், 17 பேர் நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சென்னை உயர் நீதிமன்ற பணி விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு ஆகியவற்றில் உயர்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த விதிகளின்படி, உரிய தகுதியை பெறாத நிலையில், நீதிபதிகளின் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், உரிய தகுதியை பெற, இரண்டு ஆண்டு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, திறன் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டதுடன், திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டும், சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற இரண்டு ஆண்டுகளும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது; இது, முற்றிலும் விதிமீறல்.
தேர்வு நடைமுறைகளில், ஏற்கனவே பணியில் உள்ளவர்களை மட்டும் பங்கேற்க அனுமதித்ததன் வாயிலாக, பிற தகுதியான விண்ணப்பதாரர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய செயல், பொது மக்கள் மத்தியில் தவறான செய்தியை கொண்டு சேர்த்து விடும். எனவே, இப்பதவிகளுக்கு மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது, தகுந்த தகுதிகளை பெற்றதால், தங்களை பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்ற சில விண்ணப்பதாரர்கள் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், 17 பேரின் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டனர்.