ஆயிரப்பேரியில் கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
1 min read
9th round of Foot-and-Mouth Disease vaccination camp for livestock in Ayirapperi
2.7.2026
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சி புதூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கால்நடை களுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கால்நடைகளுக்கு 9 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத்தன்மையும், இரத்த சோகையும் ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்க விடக்கூடாது, அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும். சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி போடுவதும் இந்நோயினை தடுக்க உகந்த வழியாகும்
தென்காசி மாவட்டத்தில் 126320 பசு இனங்களுக்கும் 6892 எருமை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்காசி மாவட்டத்திலுள்ள 61 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை மருத்துவர்கள், கால்நடை உதவி மருத்துவர். கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டு இன்று 01072026 முதல் 31.07.2026 வரை 31 நாட்களுக்கு தடுப்பூசிப்பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்தடுப்பூசிப்பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும் அல்லது பொது மக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இன்றைய தினம் 256 தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு சுகாதார அட்டை மற்றும் 42 கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கள் வழங்கி தடுப்பூசி போடப்பட்டது. ஆகவே, கோமாரி நோய் தடுப்பூசி போடும் நாளில் விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தவறாது தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.ஜெயச்சந்திரன்அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் கோவில்ராஜா, உதவி இயக்குநர் டாக்டர்.தெரசா மேரி, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர். முத்துமாரி (தென்காசி), டாக்டர். விஷ்ணு ராகவேந்திரன்(வல்லம்), கால்நடை ஆய்வாளர்கள் பழனிசாமி, அருண்குமார், முத்துலெட்சுமி மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.