கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் உடல் உறுப்புகள் தானம்.
1 min read
Organs of Kadayanallur MLA’s relative donated
9/7/2026
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்
தி.மு. இராசேந்திரன் அவர்களின் சித்தி (தாயாரின் உடன் பிறந்த தங்கை) சரஸ்வதி – வாழ்வீமத்தேவர்
தம்பதியரின் மகன்
வா.கனகராஜ் ( வயது 43 ) நேற்று முன்தினம் 07.07. 2026 அன்று மாலை 5 மணி அளவில் கீழக்கலங்கல் கிராமத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் பைக் விபத்தில் சிக்கி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் பாளையங்கோட்டை பல்நோக்கு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட
போதிலும் நினைவு திரும்பாமல் நேற்று பிற்பகல் மூளைச்சாவடைந்தார்.
செய்தியறிந்து மருத்துவ மனைக்கு விரைந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் தி.மு. இராசேந்திரன் மருத்துவ கல்லூரி டீன் (பொறுப்பு)
டாக்டர் பாலசுப்பிரமணியன், உறைவிட மருத்துவர் டாக்டர் சர்மிளா ஆகியோரிடமும், உறவினர்களிடமும் ஆலோசனை செய்தார்.
அதை தொடர்ந்து மூளை சாவடைந்த தமது தம்பியின் உடல் உறுப்புகளைத்தானம் செய்ய குடும்பத்தினரிடம் கலந்து பேசி அவர்களின் சம்மதத்தைப்பெற்றார்.
அதைத்தொடர்ந்து உடல் உறுப்பு தானத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கின.
அதன்படி நேற்று பகலில் இரண்டு கண்கள், இரண்டு சிறுநீரகம், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக எடுக்கின்ற பணி தொடங்கி உள்ளன.
இவை வெவ்வேறு ஊர்களில் ஆறு பேருக்கு பொருத்தப்
படுகின்றன.
இளம் வயதில் தமது குடும்ப உறுப்பினர் மூளைச்சாவடைந்த துயரை ஒரு பக்கம் தாங்கிக்கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்து சிலருக்கு உயிரும், ஒளியும் கொடுக்க குடும்பத்தினரை வேண்டிக் கொண்ட கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் மற்றும் , உடலுறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்த கனகராஜின் மனைவி ராஜேஸ்வரி,மகன்கள் கவி பிரதாப்,வருண் சக்கரவர்த்தி கனகராஜன் தாயார் சரஸ்வதி, அண்ணன் காசிப்பாண்டி ஆகியோரையும்
மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்..
இறந்தும் வாழும் கனகராஜ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் தென்காசி மாவட்டம்,ஃஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் கிராமத்தில் இன்று 10.07.2026
முற்பகல் 11 மணி அளவில் நடைபெற உள்ளதாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி. மு. இராசேந்திரன் தெரிவித்தார்