July 9, 2026

Seithi Saral

Tamil News Channel

மனோஜ் பாண்டியன் வெற்றியை எதிர்த்து விபின் சக்ரவர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

1 min read

Vipin Chakravarthy files case in High Court challenging Manoj Pandian’s victory.

9.7.2026
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனோஜ் பாண்டியன் வெற்றி செல்லாது என அறிவிக்கும்படி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்ட தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவுகள் 80, 81, 100(1)(b) மற்றும் 123 ஆகிய பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பறக்கும் படையினரின் பல்வேறு சோதனைகளில் பெருமளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவை தொடர்பாக பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் முடிவை பாதிக்கும் வகையில் சட்டவிரோத காணொலிகள் பரப்பப்பட்டதாகவும், அவை வாக்காளர்களின் சுதந்திரமான வாக்குரிமையில் தலையீடு செய்யும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் தேர்தல் முடிவில் நேரடியான மற்றும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுதாரர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

எனவே, திமுக வேட்பாளர் பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன் போட்டியிட்ட 2026 ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற தேர்தலை செல்லாததாக அறிவித்து, 04.05.2026 அன்று வெளியிடப்பட்ட தேர்தல் முடிவை வெற்றி அறிவிப்பை ரத்து செய்யுமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுக்கு பின் நடந்த ஆட்சி மாற்றத்தால் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களும் சலசலப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. அதிமுக திமுக போன்ற பல பெரிய கட்சிகளில் குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டதால் அந்த சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் சூழலில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் வருமா என ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *