ரெயிலில் முதலிரவு அறை: டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்
1 min read
‘Wedding night’ cabin on train: Ticket examiner suspended
9/7/2026
எக்ஸ்பிரஸ் ரெயில் முதல் வகுப்பு ஏசி பெட்டியை முதலிரவு அறைபோல் மாற்றப்பட்ட விவகாரத்தில் டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரெயிலில் 2-வது வகுப்பு முன்பதிவு டிக்கெட் கிடைப்பதே நம்மில் பலருக்கு சிகரத்தை தொட்டதுபோல் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் வசதி படைத்த ஒரு தம்பதி, ‘கூபே’ எனப்படும் முதல் வகுப்பு ஏ.சி. தனி அறை பெட்டியை தங்களது தேனிலவு பயணத்துக்காக முதலிரவு அறையாக மாற்றியுள்ளனர்.
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றின் முதல் வகுப்பு ஏ.சி. தனியறை பெட்டி சொகுசு ஓட்டலின் ‘ஹனி மூன் சூட்’ போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது சமூகவலைதள வீடியோவில் வைரலாகியது. அந்த ‘கூபே’ அறையின் கூரையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களாலும், இருக்கைகளில் இதயம் போன்று ரோஜா இதழ்களாலும், அறையின் பிற பகுதிகள் மலர் மாலைகள் மற்றும் மலர்களாலும், ஏறும் படிக்கட்டுகளில் செயற்கை விளக்குக ளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
படுக்கையில் “ஐ லவ் யூ” என்ற எழுத்துக்களையும் இடம்பெற செய்து இருந்தது. அந்த அறையே முதலிரவு அறைபோல் முற்றிலும் மாற்றப்பட்டிருந்தது.
யாரோ ஒரு புதுமண தம்பதிக்காக முன்பதிவு செய்யப்பட்டு இருந்த அந்த பெட்டியை, தனியார் ஏஜென்சி ஒன்று இவ்வாறு மாற்றி இருந்தது. தங்களின் அலங்கார திறமையை வெளி உலகிற்கு காட்டுவதற்காக அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியதும் அந்த தனியார் நிறுவனம்தான் என சொல்லப்படுகிறது.
ஆனால் அதில் பயணித்தவர்கள் யார்? என்ற விவரங்கள் தெரியவில்லை.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஓடும் ரெயிலில் இப்படி அலங்காரம் செய்ய அனுமதி உண்டா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. மேலும் சிலர் கடுமையாக விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு இருந்தனர்
இருப்பினும், பலூன்கள், காகிதங்கள் எளிதில் தீப்பற்ற வாய்ப்புள்ளது என பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து நெட்டிசன்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவரும் சூழலில், பெரும்பாலானோர் இந்த தனித்துவமான முயற்சியைப் பாராட்டி, “வீல்ஸ் ஆன் ஹனிமூன்’ (பயணத்தோடு ஒரு தேனிலவு) என்று வேடிக்கையாக குறிப்பிட்டும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், அந்த ரெயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல் வகுப்பு ஏ.சி. தனி அறையை அதில் பயணித்த தம்பதி தாங்களாகவே டெக்கரேட்டர் வைத்து அலங்கரித்துள்ளனர். ஜால்னா ரெயில் நிலையத்தில் வைத்து ரெயிலில் ஏறிய டெக்கரேட்டர் அலங்கார பணியை மேற்கொண்டுள்ளார். அது அத்துமீறிய செயல்.
அலங்காரப் பணியாளர் ஒருவர் அனுமதியின்றி ரெயில் பெட்டிக்குள் நுழைந்தது விதிமீறலாகும். அச்சமயத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரெயிலுக்குள் அத்துமீறி நுழைந்தது, டிக்கெட் இல்லாமல் பயணித்தது ஆகிய குற்றங்களுக்காக டெக்கரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.