ஈரான் ஹிட் லிஸ்டில் இருக்கும் டிரம்ப், நேதன்யாகு
1 min read
Trump, Netanyahu on Iran hit list
14.7.2026
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28-ந் தேதி அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரின் இறுதிச் சடங்கு 4 மாதங்கள் கழித்து கடந்த வாரம் நடந்து முடிந்தது.
இதனிடையில் அவரது மகன் மொஜ்தபா கமேனி கடந்த மார்ச் 8 இல் புதிய உச்ச தலைவர் ஆனார். ஆனால் அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. பிப்ரவரி 28 தாக்குதலில் அவரும் காயம்பட்டதாக கூறப்படுகிறது.
அறிக்கைகள் மூலம் மட்டுமே பேசிவரும் மொஜ்தபா, தனது தந்தையின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்க்கப்படும் என கூறி வருகிறார்.
வரும் ஜூலை 28 அன்று தனது தந்தையின் நினைவேந்தல் நிகழ்வில் அவர் நேரில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஈரான் அதிகாரிகளால் நடத்தப்படும் ஹம்ஷஹ்ரி என்ற நாளிதழ் இணையத்தில் ஒரு ஹிட் லிஸ்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல உலகத் தலைவர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
ஆரஞ்சு உடை அணிந்த டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோரின் புகைப்படங்களில், அவர்கள் நெற்றியில் துப்பாக்கியால் சுடுப்படுவதை குறிக்கும் ஸ்னைப்பர் குறி வரையப்பட்டுள்ளது. இது அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதை குறிப்பதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.
அவர்களுக்குக் கீழே, ஆரஞ்சு நிற சிறை உடைகளை அணிந்திருப்பது போல மேலும் 11 உலகத் தலைவர்களின் படங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அவர்களில், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி அதிபர் பெரெட்ரிக் மெர்ஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் அடங்குவர்.
டிரம்பைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் எச்சரித்திருந்தது.
இதனாலேயே துருக்கியில் நடந்த நேட்டோ மாநாட்டிலிருந்து டிரம்ப் திரும்பும்போது கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தை மாற்றிவிட்டுப் பழைய விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.
மேலும் தனக்கு ஏதாவது நடந்தால் ஈரானை மொத்தமாக அழிக்க அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்காக 1000 ஏவுகணைகள் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.