July 15, 2026

Seithi Saral

Tamil News Channel

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: பத்திரப்பதிவை ரத்து செய்தது மதுரை ஐகோர்ட்டு

1 min read

Palani Temple land irregularity case: Madurai High Court cancels property registration

15.7.2026
பழனி கோவில் மடத்திற்கு சொந்தமான நில முறைகேடு வழக்கில் பத்திரப்பதிவை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பழனி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோவில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம்.

மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி கோவில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.

இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில், மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர். மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி கோவில் நிலங்களை பாதுகாப்பதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *