நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி அடித்துக்கொலை- 3 போலீசார், 8 கைதிகள் கைது
1 min read
Differently-abled person beaten to death in Nagercoil prison – 8 inmates arrested
16.7.2026
நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 சக சிறை கைதிகளை திடீரென்று போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்த வழக்கை திசைத்திருப்ப முயற்சிப்பதாகவும், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன். அவரது மகன் சபரி வர்மன் (வயது 34). மாற்றுத்திறனாளி. ஈத்தங்காட்டில் மளிகை கடை நடத்தி வந்தார். கடையில் குட்கா புகையிலை விற்றதாக தென்தாமரைகுளம் போலீசார் சமரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். அங்கு சிறை காவலர்கள் அவரை கட்டி வைத்து சித்ரவதை செய்து கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், கை முறிவு, உடல் முழுவதும் 19 இடங்களில் காயங்கள் இருப்பது உறுதியானது.
இதுதொடர்பாக நேசமணிநகர் போலீசார் நாகர்கோவில் மாவட்ட சிறை காவலர் ஜெகன், தலைமை வார்ன் சுரேஷ், சிறைக்காவலர் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீது கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஒரு கைதிக்கும், சபரிவர்மனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது அங்கு வந்த வார்டன் சபரிவர்மனை தாக்கினார் என்றும், அவர்களின் தகராறை விலக்கிவிட்டு வார்டன் சென்ற பின்னர் 8 கைதிகள் சேர்ந்து சபரிவர்மனின் கை, கால்களை கட்டி வைத்து தாக்கியதாக கூறி போலீசார் திடீரென்று ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். சிறையில் உள்ள சககைதிகள் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த விஷ்ணு (21), சாரதி (19), குலசேகரத்தை சேர்ந்த ஜெகன் (40), சரத், நெல்லையை சேர்ந்த பெருமாள், கன்னியாகுமரியை சேர்ந்த சேதுராம்(30), அஜித் (29), கொட்டாரத்தை சேர்ந்த அரவிந்த் (27) ஆகியோர் மீது கொலை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் நேசமணிநகர் போலீசாரால் வழக்குபதிவு கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட 3 போலீசாரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கைதான 8 கைதிகளில் ஜெகன் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. அஜித் மீது கொலை வழக்கு உள்ளது. இவர்கள் இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளனர். பெருமாள் நெல்லையை சேர்ந்தவர். இவர் மீது கொலை வழக்கு உள்ளது. இதனை தவிர 3 பேர் மீது போக்சோ வழக்கும், 2 பேர் மீது அடி தடி வழக்கும் உள்ளது. இதற்கிடையே சபரிவர்மனின் மரணத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக அவரது சகோதரி கவுதமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கவுதமி நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது சகோதரரின் உடற்கூராய்வு அறிக்கையில், அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த காயங்களால் மரணம் ஏற்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
19 இடங்களில் கொடூரமான காயங்கள் இருந்தும், அது மரணத்திற்கு காரணமில்லை என்றால், எனது சகோதரர் எப்படி இறந்தார்? அவரை கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்றார்களா அல்லது மூச்சுத் திணறச் செய்து கொன்றார்களா என்ற உண்மை எங்களுக்குத் தெரிய வேண்டும். அவர் எப்போது இறந்தார் என்ற சரியான நேரமோ அல்லது தேதியோ அந்த அறிக்கையில் இல்லை. வெள்ளிக்கிழமையா, சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா என்பதில் பெரும் மர்மம் நீடிக்கிறது. எனது சகோதரர் சாகக்கூடியவர் அல்ல; அவருக்கு எந்தவிதமான உடல்நலக் குறைபாடும் கிடையாது. அவரது கை ஊனமே தவிர, அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.
தற்போது 3 சிறை வார்டன்கள் மற்றும் 8 கைதிகளைக் கைது செய்திருப்பது என்பது அதிகாரிகளையும், உண்மையான குற்றவாளிகளையும் காப்பாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு கண்துடைப்பு நாடகமே தவிர வேறில்லை. இதில் மிகப்பெரிய அளவில் போலித்தனம் நடக்கிறது.
யாரையோ காப்பாற்ற இவர்கள் முயற்சி செய்கிறார்கள். எனவே, இந்த மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். மாவட்ட கலெக்டர் இதில் நேரடியாகத் தலையிட்டு, மீண்டும் முறையாக உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும். எனது சகோதரரின் மரணத்திற்கு முறையான நீதி கிடைக்கும் வரை, அவரது உடலை வாங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சபரிவர்மனை அடித்துக் கொன்றதாக 3 போலீசார் மற்றும் 8 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 103(1) பிஎன்எஸ் (கொலை), 61(2) பிஎன்எஸ் (குற்றச்சதி), 115(2) மற்றும் 118(1) பிஎன்எஸ் (காயம் மற்றும் கொடுங்காயத்தை ஏற்படுத்துதல்), 191(2) பிஎன்எஸ் (கலகம் விளைவித்தல்), 296(பி) பிஎன்எஸ் (ஆபாசமான செயல்கள்), 238 பிஎன்எஸ் (சாட்சியங்களை மறைத்தல் அல்லது அழித்தல்) ஆகிய 7 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடலை வாங்க மறுப்பு, மறியல்
சபரி வர்மனின் உடலை 3வது நாளாக உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனால் பிரேத பரிசோதனைஅறையின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை, அவரது மனைவி ஆனந்தவல்லி மற்றும் குடும்பத்தினர், பொதுமக்கள் கன்னியாகுமரி- நாகர்கோவில் 4வழி சாலையில் வரிசையாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.